ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒன்றிணையும் அமெரிக்கவாழ் தமிழர்கள்! மே 22ல் போராட்டம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒன்றிணையும் அமெரிக்கவாழ் தமிழர்கள்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மே 22-ஆம் தேதி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த அமெரிக்கவாழ் தமிழர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100-நாட்களுக்கும் மேலாக அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திவரும் தூத்துகுடி மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஏராளமானோர், அமெரிக்காவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதன்தொடர்ச்சியாக, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மே 22-ஆம் தேதி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் துணைத்தூதர் டி.பி. சிங்கை சந்தித்தனர். அப்போது அவரிடம், தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றியும், அதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.

15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மேலும், அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி துன்டாஸ் சதுக்கத்தில் ( Dundas Square) ஏப்ரல் 8-ஆம் தேதி பேரணி நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரின் கையெழுத்து அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட டி.பி. சிங், இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதேபோல, கனடாவிலும் மனு கொடுக்கப்பட்டது. மேலும், நியூயார்க்,  ஜோர்ஜியா, டெக்சாஸ், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் தூதரகங்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் விஷவாயு கசிவால் சுற்றுச்சூழல் மாசு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, சருமப் பிரச்னை, உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அம்மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழர்களே ஒன்றுசேருங்கள்! கரம் கோத்து நின்று நம் எதிர்ப்பை தெரிவிப்போம்!!. நாமும் நம் சந்ததியும் நலம்பெற ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை நம் குரலை ஓங்கி ஒலிப்போம்’ என்கின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒன்றிணையும் அமெரிக்கவாழ் தமிழர்கள்! மே 22ல் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராயல் திருமணத்தை வரமாக நினைக்கும் பிரிட்டன் மக்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்