அமெரிக்காவில் இந்திய மாணவன் கொலை... குற்றவாளி என்கவுன்டரில் பலி

அமெரிக்காவில் இந்திய மாணவனை கொலை செய்த குற்றவாளி என்கவுன்டரில் பலி

தெலங்கானாவை சேர்ந்த மாணவர் சரத் கோப்புவை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட நபர், அமெரிக்காவில் போலீஸுடனான மோதலில் கொல்லப்பட்டான். இந்த மோதலில் இரகசிய போலீஸார் உட்பட காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமுற்றனர்.

ஜூலை 6-ஆம் தேதி, அமெரிக்காவின் கான்சாஸ் நகரத்தில் மிசௌரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்த மாணவர் சரத் கோப்பு கொல்லப்பட்டார். கான்சாஸ் நகர உணவகம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்த அவர், அங்கு நடந்த கொள்ளை முயற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு வாரங்கல் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கொலை செய்து விட்டு தப்பியோடியவனை அமெரிக்க காவல்துறையினர் தேடி வந்தனர். அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், கடந்த ஞாயிறன்று அமெரிக்க காவல்துறையின் இரகசிய போலீஸார் இருவர், கான்சாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நபர் இருப்பதை கண்டறிந்தனர். போலீஸார் நெருங்குவதை உணர்ந்த அந்த நபர், இரகசிய காவல் அதிகாரிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் இன்னொரு நபருடன் தப்பினான்.

ஒரு மணி நேரம் கடந்த நிலையில், காவல்துறையினர் அவன் ஆள் இல்லாத வீடு ஒன்றினுள் புகுந்திருப்பதை கண்டுபிடித்தனர். திடீரென அவன் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.

தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையில், இன்னொரு காவல்அதிகாரி காயமுற்றார். சந்தேகத்திற்குரிய நபர் பலியானார். காவல்துறையினர், அவன் பயன்படுத்திய காரை கைப்பற்றியதோடு, அவனுடன் இருந்த நபரையும் கைது செய்தனர்.

காயமுற்ற காவல் அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரத் கோப்புவை கொன்றவனை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு கான்சாஸ் நகர இந்தியர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ள அதன் தலைவர் ஜெகதீஷ் சுப்ரமணியன், காயமுற்ற அதிகாரிகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

You'r reading அமெரிக்காவில் இந்திய மாணவன் கொலை... குற்றவாளி என்கவுன்டரில் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவர்கள் பாதுகாப்புக்காக போலீசார் நியமனம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்