சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..

How Edappadi palanisamy became Chief minister?

சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) பிரச்சாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது:

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் நான் சொன்னேன். 'எம்.ஜி.ஆர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; அம்மையார் ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; அண்ணா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; காமராஜர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; பக்தவச்சலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; கலைஞர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த காரணத்தினால் ஒரு அரசியல் விபத்தின் காரணமாக, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்து அமர்ந்திருக்கிறார்" என்று சொன்னேன்.

அதற்கு அவர், "நான் விபத்தில் முதலமைச்சர் ஆகவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் " என்று பேசியிருக்கிறார். நான் இதுவரையில், விபத்தினால் முதல்வர் ஆனவர் எடப்பாடி என்று நினைத்திருந்தேன். காலில் விழுந்து முதலமைச்சர் ஆனவர் அவர். சசிகலா காலில் விழுவதற்கு அவர் தவழ்ந்து போனதை வாட்ஸ் அப்பில் பார்த்திருப்பீர்கள்.

சசிகலாவின் காலில் தவழ்ந்து முதலமைச்சராகி விட்டு, வெட்கம் இல்லாமல் வந்து உட்கார்ந்து கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று சொல்கிறீர்களே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றால் தைரியம் இருந்தால் - தெம்பு இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை வந்து சந்தியுங்கள், நானும் வந்து சந்திக்கத் தயார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு கூவத்தூரில், சசிகலா தன்னையே முதலமைச்சராக அறிவித்தார். சசிகலா பதவி ஏற்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த காரணத்தால், சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது. அப்போது யாரை முதலமைச்சராக்கலாம் என்று யோசனை செய்தபோது, காலில் ஏதோ தவழ்ந்திருக்கிறது. அந்த அம்மா பரிதாபப்பட்டு பதவி கொடுத்துவிட்டு, சிறையில் இருக்கிறார். பதவி கொடுத்த அம்மாவிற்கு - சிறையில் இருக்கும் அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு நீங்கள் இருக்கிறீர்கள்.

அத்தனை அமைச்சர்களும் அவ்வளவு ஊழல் – லஞ்சம் – கலெக்சன் – கரெப்சன் – கமிசன் என்று இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் நடைபெற்றதும், நீங்கள் அத்தனை பேரும் சிறையில் தான் இருக்கப்போகிறீர்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி - ஜின்பிங் சந்திப்பு புதிய சகாப்தம் படைக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்