எடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு

m.k.stalin campaign for dmk in vikkiravandi

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு அக்கிரம ஆட்சி – அநியாய ஆட்சி – அடிமை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அந்த ஆட்சியை உருவாக்கித் தந்திருந்தாலும் - ஜெயலலிதா அந்த ஆட்சியை வழிநடத்திக் காட்டியிருந்தாலும், ஒரு எடுபிடி ஆட்சியாக மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சிக்கு அடிபணிந்து நடைபோடும் ஒரு ஆட்சியாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது.

வேடிக்கையாகச் சொல்வார்கள், நொந்து நூடுல்ஸா போயிட்டான் என்று, அதுபோல், தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் நொந்து நூடுல்சாக மாறியிருக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேர்த்து மொத்தம் 31 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டிருக்கிறார். நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைப்பதற்காக முதலமைச்சரில் இருந்து எல்லா அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.

இந்த ஆட்சி முடிய இன்னும் ஒன்றரை வருடம்தான் இருக்கிறது. எனவே, இந்த ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு வாக்களியுங்கள்.

நாடு முழுவதுமாக 220 பணக்காரர்கள், ஸ்டேட் வங்கியில் பெற்ற ரூ.76 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு பரிந்துரையில் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசிற்கு மனது வரவில்லை. அதைத் தட்டிக்கேட்க இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு துணிவில்லை. பயந்து – அஞ்சி – நடுங்கி – எடுபுடி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லோரும் முடிவு கட்ட வேண்டும்.

எந்தத் துறையாக இருந்தாலும் ஊழல் நடக்கிறது. பொதுப்பணித் துறையில் நடந்த ஊழலை விசாரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடுத்தார்கள். அதனை விசாரித்த நீதிமன்றம் இதில் முகாந்திரம் இருக்கிறது என்று கூறி, சி.பி.ஐ. விசாரிக்க உத்திரவிட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியமிருந்தால் ராஜினாமா செய்து விட்டு, வழக்கைச் சந்திதிருக்க வேண்டும். ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ளார். அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தடை உத்தரவுகள் நீக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading எடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்