முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

parvez Musharrafs health deteriorates, rushed to Dubai hospital

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப். ஆட்சி மாறிய பிறகு கடந்த 2014ம் ஆண்டில் இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டன. மேலும், 2007ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டத்தை நிறுத்தி வைத்ததற்காக தேசத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அதிகபட்சமாக தூக்குத் தண்டனை கூட விதிக்கப்படலாம்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் நீதிமன்ற அனுமதி பெற்று துபாய்க்கு சிகிச்சைக்காக சென்ற முஷாரப் அங்கேயே தங்கி விட்டார். அதன்பின், அவரை வழக்கு விசாரணைக்கு வருமாறு பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைசியாக, கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போது, முஷராப் நாடு திரும்புவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், முஷாரப் வரவில்லை. அவரது உடல்நிலை விமானத்தில் பயணிக்க அனுமதிக்காது என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.

துபாயில் மே 30ம் தேதி திடீரென முஷாரப்புக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் முஷாரப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

You'r reading முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகக் கோப்பை கிரிக்கெட்... முதல் போட்டியில் இங்கிலாந்து அபாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்