கனடா பிரதமராக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து..

Justin Trudeaus Liberals win in Canada election

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்ரிக்கா போன்று தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கனடாவும் ஒன்று. குறிப்பாக. இலங்கைத் தமிழர்கள்தான் அதிகளவில் புலம் பெயர்ந்து வந்து கனடாவில் குடியேறியிருக்கிறார்கள்.

இதனால், தமிழ் மொழியின் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படும் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ பிரதமரானார். அவருக்கு தமிழர்கள் மீது தனிப்பாசம் உண்டு. அதனால், தமிழர்களிடையே செல்வாக்கு படைத்தவர்.

தற்போது கனடாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 338 தொகுதிகளில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களையும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. தனிப்பெரும் கட்சியாக லிபரல் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டிக்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், பிளாக் குயெபெக்கோயிஸ் 32 இடங்களையும், நியூ டொமாக்ரடிக் 24 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இது போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மீண்டும் பிரதமராக உள்ள ஜஸ்டினுக்கு இந்தியப் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஜனநாயகத்தின் மீதான அர்ப்பணிப்பு, மதிப்புகள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை பரிமாறுவதன் மூலம் இந்தியாவும், கனடாவும் இணைந்து செயல்படுகின்றன. மீண்டும் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எனது வாழ்த்துக்கள். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading கனடா பிரதமராக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்