அமெரிக்க அதிபர் தேர்தல்.. டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் செப்.29ல் நேரடி விவாதம்..

First US presidential debate to be held on September 29.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், ஜோ பிடன் நேரடி விவாதம் நடத்தும் முதல் நிகழ்ச்சி செப்.29ம் தேதி நடைபெறவுள்ளது.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த போதிலும், கொரோனா காரணமாகப் பிரச்சாரம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.அந்த நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேராக விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆனால், தற்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. 43 லட்சம் பேர் வரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய் பரவல் காரணமாகப் பல மாகாணங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், அதிபர் வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில், வரும் செப்.29ம் தேதியன்று அதிபர் வேட்பாளர்களின் முதல் விவாத நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிபருக்கான விவாத நிகழ்ச்சி அமைப்பு இதை நேற்று அறிவித்தது. இதன்படி, ஒகியோ மாகாணத்தில் கிளேவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் முதல் விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த அமைப்புடன் கேஷ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கிளேவ்லேண்ட் கிளினிக் ஆகியவையும் இணைந்து நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜே பிடன் பங்கேற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, 2வது விவாத நிகழ்ச்சி, அக்டோபர் 15ம் தேதியன்று, புளோரிடா மாகாணம், மியாமியில் அட்ரியேன்னா அர்ஷத் சென்டரில் நடைபெறவுள்ளது. அக்.22ல் நாஷ்வில்லேவில் பெல்மோண்ட் பல்கலைக்கழகத்தில் 3வது விவாத நிகழ்ச்சி நடைபெறும்.
துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல் விவாத நிகழ்ச்சி, அக்.7ல் சால்ட் லேக் சிட்டியின் உடாக் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.ஒவ்வொரு விவாதமும் இரவு 9 மணிக்குத் தொடங்கி 10.30 மணி வரை இடைவேளை இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

You'r reading அமெரிக்க அதிபர் தேர்தல்.. டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் செப்.29ல் நேரடி விவாதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது.. மாவட்டங்களில் பரவுகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்