ஜோ பைடனின் முதல் கையெழுத்து.. 5 லட்சம் இந்தியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

joe biden ensures H1B visa, green card plans

டிரம்ப் ஆட்சியில் இந்தியர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய விவகாரம் H1B விசா விவகாரம். இந்தியர்கள் ஊழியர்களாக அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது இந்த H1B விசா. இந்த விசா குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால் டிரம்ப் ஆட்சியில் இந்தியர்களுக்கு H1B விசா கொடுப்பது நிறுத்தப்பட்டது. அதேபோல் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமையும் அளிக்கப்படுவது தடை செய்யப்பட்டது. இந்திய தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் டிரம்ப் செவிமடுக்கவில்லை.

ஆனால் தற்போது பைடன் மூலமாக இந்த விவகாரத்தில் விடிவுகாலம் பிறக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் நிற்கும்போதே பைடன் இது தொடர்பாக பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்தார். ``ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டம் நவீனமாக்கப்படும். முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் பைடன், ஜனவரியில் முறைப்படி அதிபர் ஆனதும் குடியுரிமை விவகாரம் தொடர்பாக தனது முதல் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, வருடம் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் இவர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கேற்றாற் போல், தனது வெற்றி உரையில், ``கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம் சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இனி யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகிறோம். எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்" என்று பேசினார் பைடன்.

இதுமட்டுமல்ல, டிரம்ப் கொண்டு வந்த இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதித்த தடையும் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே நீக்கப்படும். எல்லைப் பகுதியில் நீடிக்கும் மனிதநேயப் பிரச்சினைகளுக்கும், குழப்பங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று பைடன் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஜோ பைடனின் முதல் கையெழுத்து.. 5 லட்சம் இந்தியர்கள் ஹேப்பி அண்ணாச்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! இந்த வார இறுதியில் ரூ.40000 தாண்டும்! 09-11-2020!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்