ராகுல்காந்தியை அவமதிப்பதா? ஒபாமா மீது உ.பி.யில் வழக்கு..

ராகுல்காந்தியையும், மன்மோகன்சிங்கையும் தனது புத்தகத்தில் ஒபாமா அவமதித்துள்ளதாக கூறி, உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது அரசியல் அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, ஏ ப்ராமிஸ்டு லேண்ட்(A promissed land) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. எனினும், இந்த புத்தகம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் மதிப்புரை வெளிவந்துள்ளது. ஒபாமா எழுதியுள்ள அந்த புத்தகத்தில், ராகுல்காந்தி எப்போதும் பதற்றமானவராகவும், கணிக்க முடியாதவராகவும் இருக்கிறார். ஆசிரியரை கவர வேண்டுமென்ற ஆர்வமுடைய மாணவராக அவர் இருந்தாலும், திறமை இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் ஆழமாக கற்று கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாதவராக உள்ளார் என்று குறிப்பிட்டிருப்பதாக மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது.

அதே போல், மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாப் கேட்ஸ்சும், எவ்வித பதற்றமும் இல்லாத நேர்மை உடையவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மன்மோகன்சிங்கின் அறிவுக் கூர்மையைப் பாராட்டியிருந்தாலும், ராகுல்காந்திக்கு போட்டியாக வர மாட்டார் என்ற அடிப்படையில்தான் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி என்றும் ஒபாமா எழுதியிருக்கிறார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் லால்கஞ்ச் சிவில் நீதிமன்றத்தில் ஒபாமா மீது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகில இந்திய ஊரக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கியான்பிரகாஷ் சுக்லா என்ற வழக்கறிஞர்தான் வழக்கை தொடுத்துள்ளார். அவர் தனது மனுவில், ஒபாமா தனது புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், ராகுல்காந்தியையும் அவமதிக்கும் வகையில் எழுதியுள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஒபாமா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

You'r reading ராகுல்காந்தியை அவமதிப்பதா? ஒபாமா மீது உ.பி.யில் வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ட்ரெக்ட்சர் இல்லை: காயமுற்றவர்களை போலீஸ் என்ன செய்தது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்