அமெரிக்காவில் ஈபி-2 பெற்றுள்ளீரா? 151 ஆண்டுகளில் கிரீன்கார்டு!

அமெரிக்காவில் ஈபி-2 பெற்றுள்ளீரா?

அமெரிக்காவில் விசா பெற்று பணிபுரிந்து வருபவர்களின் கனவு குடியுரிமை பெறுவதுதான். கடந்த ஆண்டுகளில் அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை (யுஎஸ்சிஐஎஸ்) மூலம் 'கிரீன்கார்டு' வழங்கப்பட்ட விகிதத்தை கணக்கில் கொண்டு, அமெரிக்காவிலுள்ள கேட்டோ இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் விசா வகையின் அடிப்படையில் 'கிரீன்கார்டு' கிடைக்க இருக்கும் காலத்தை அனுமானித்திருக்கிறது.

அதன்படி, அதிகபட்சமாக ஈபி-2 வைத்திருப்பவர்களுக்கு 151 ஆண்டுகளில் கிரீன்கார்டு கிடைக்கும் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

ஈபி-1, ஈபி-2. ஈபி-3 என்ற வகையினரைக் கெண்டு இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, ஈபி-1 வகையில் 13,082, ஈபி-2 வகையில் 2,879, ஈபி-3 வகையில் 6,641 ஆக மொத்தம் 22,602 இந்தியருக்கு மட்டும் ஈபி பிரிவில் அமெரிக்க நிரந்தர குடியுரிமை அனுமதியான 'கிரீன்கார்டு' வழங்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் 20 வரையிலான தகவல்படி 6,32,219 இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கும் 'கிரீன்கார்டு' பெறுவதற்கு காத்திருக்கின்றனர்.

அசாதாரண தகுதி என்ற பிரிவில் உள்ளவர்களுக்கு ஈபி-1 (பணி அடிப்படை) வழங்கப்படுகிறது. 34,824 விண்ணப்பதாரர்கள், அவர்களின் வாழ்க்கைதுணை மற்றும் பிள்ளைகள் 48,754 பேர் என்று மொத்தம் 83,578 இந்தியர்கள், ஈபி-1 பிரிவில் 'கிரீன்கார்டு' கோரியுள்ளனர். உயர்திறன் வகுப்பினரான இவர்கள் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சிறப்புப் பட்டம் பெற்றவர்களுக்கு ஈபி-2 வழங்கப்படுகிறது. 2,16,684 இந்தியர்கள், அவர்களை சார்ந்த கணவர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் 2,16,684 என மொத்தம் 4,33.368 பேர், ஈபி-2 பிரிவில் 'கிரீன்கார்டு'க்காக காத்திருக்கிறார்கள். தற்போதைய விசா வழங்கும் விதிகளின்படி, இவர்கள் 150 ஆண்டுகள் காத்திருக்க நேரிடும்.

இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஈபி-3 பெறுகிறார்கள். அந்த வகையில் 54,892 இந்தியர்கள், அவர்களின் 60,381 வாழ்க்கைதுணை மற்றும் பிள்ளைகள் ஆக மொத்தம் 1,15,273 பேர் காத்திருக்கிறார்கள். இவர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஆகக்கூடும்.

விசா விதிகள் கடுமையாக இருப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் 7% என்ற அடிப்படையில் 'கிரீன்கார்டு' வழங்கப்படுகிறது. விசா விதிகள் மாறாவிட்டால் ஈபி-2 வைத்திருப்பவர்கள் வாழ்நாள் முழுக்க காத்திருந்தாலும் கிடைக்காமல் போகலாம் அல்லது போதுமடா சாமி என்று ஊர் திரும்ப நேரிடலாம்.

You'r reading அமெரிக்காவில் ஈபி-2 பெற்றுள்ளீரா? 151 ஆண்டுகளில் கிரீன்கார்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செக்குடியரசில் பொழுது போக்கு போர்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்