அமெரிக்காவைவிட்டு வெளியேறுகிறது ஹார்லி டேவிட்சன்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம், அந்நாட்டில் இருக்கும் தனது உற்பத்தி ஆலையை மூடப் போவதாக அறிவித்துள்ளது.

ட்ரம்ப், மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தி வருகிறார். இதில் முக்கியமாக ஸ்டீல் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கொதிப்படையச் செய்தது.

இந்த வரி மாற்றத்தைத் திரும்ப பெறுமாறு அந்நாட்டு பிரதிநிதிகள் ட்ரம்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ட்ரம்ப் விடாப்படியாக இருந்ததால், அந்நாடுகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.

இதனால், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு அதிகமானது. இதையொட்டி அந்நிறுவனம், ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம்’ என அறிவித்தது.

இது குறித்து அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

You'r reading அமெரிக்காவைவிட்டு வெளியேறுகிறது ஹார்லி டேவிட்சன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் பத்திரிகையாளர் மீது இனவெறி தாக்குதல்: சிக்கலில் உபேர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்