கலிபோர்னியா - தனியுரிமையை பாதுகாக்க கடுமையான சட்டம்

தனியுரிமை தரவுகளை பாதுகாக்க நுகர்வோருக்கு உரிமை அளிக்கும் புதிய சட்டம்

மின்னணு முறை பயன்பாட்டில் தங்கள் தனியுரிமையை, தரவுகளை பாதுகாக்க நுகர்வோருக்கு உரிமை அளிக்கும் புதிய சட்டம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, அமெரிக்காவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தரவுகளை எப்படி சேகரிக்கின்றன, அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன, யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்கின்றன என்பதை குறித்து நுகர்வோர் அறிந்து கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

தங்களைப் பற்றிய தரவுகளை அழித்துவிடும்படி நுகர்வோர், நிறுவனத்திடம் கோருவதற்கும், தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று நிறுவனங்களை அறிவுறுத்தவும் முடியும். 16 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் பற்றிய தகவல்களை பரிமாறுவதும் இதன் மூலம் தடுக்கப்படும்.

கலிபோர்னியா மாநில சட்டசபையில் எதிர்ப்பின்றி நிறைவேறிய மசோதா, கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரௌன் கையெழுத்திட்டு சட்டமாகவும் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் வரும் 2020 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக்கின் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து அதன் காரணமாக தனிப்பட்ட தகவல்கள், தரவுகள் குறித்து விழிப்புணர்வு பிறந்தபோது இச்சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஐரோப்பாவின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (ஜி.டி.பி.ஆர்.) காட்டிலும் கலிபோர்னியா தனியுரிமை சட்டம் கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது.

தனியுரிமை சட்டங்கள் குறித்த பேராசிரியர் அலெக்ஸியா மெக்டொனால்டு, அமெரிக்காவில் தற்போதுள்ள தனியுரிமை சட்டங்களைக் காட்டிலும் இது விரிவானதாக அமையும். அநேக நாட்கள் எதிர்பார்த்திருந்த விஷயத்தில் தற்போது ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இச்சட்ட வரைவினை தயாரித்தவர்களுள் ஒருவரான ஜனநாயக கட்சியை சேர்ந்த எட் சா, கடந்த ஆண்டு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், பயனாளர்களின் தரவுகளை கையாளும் முன்பதாக அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சித்தார். அதை வர விடாமல் தடுத்ததை கொண்டு, கலிபோர்னிய தொலைதொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உணர்ந்து கொள்ள இயலும்.

கூகுள், ஃபேஸ்புக், வெரிசோன், கோம்காஸ்ட் மற்றும் ஏடி&டி போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 2 லட்சம் டாலருக்கு மேலான தொகையை வரும் நவம்பர் தேர்தலுக்கு முன்பாக செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

You'r reading கலிபோர்னியா - தனியுரிமையை பாதுகாக்க கடுமையான சட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறையில் அடைக்கப்படிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பியதால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்