கென்யா: நீர் யானை தாக்கி சுற்றுலா பயணி பலி

ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை, புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை நீர் யானை தாக்கியது. அதில் அவர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார்.
கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நைவாஷா என்ற ஏரி உள்ளது. இது வனவிலங்கு சுற்றுலா மையமாகும். சனிக்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை தைவானை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் இங்கு நீர் யானையை புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது நீர் யானை தாக்கியதில் சாங் மிங்க் சுவாங்க் (வயது 66) என்ற பயணி பலத்த காயமுற்றார்.
 
நீர் யானை அவரை மார்பில் கடித்து விட்டது. பலத்த காயமடைந்த அவர் நைவாஷா மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்னொருவரான வூ பெங்க் டே (வயது 62) அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த ஆண்டில் சாங் மிங்க் சுவாங்க் உள்பட இதுவரை ஆறு பேர் இந்தப் பகுதியில் நீர் யானையால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 500 பேர் ஆப்பிரிக்காவில் நீர் யானைகளால் கொல்லப்படுகின்றனர். 2,750 கிலோ எடையுள்ள நீர் யானை, கூரான பற்கள் கொண்ட மிகவும் ஆபத்தான விலங்காகும்.
 
"இரு சுற்றுலா பயணிகளும் எந்தச் சூழ்நிலையில் தாக்கப்பட்டனர் என்ற சரியான விவரம் இதுவரை தெரியவில்லை. வனவிலங்கு சுற்றுலா மையத்திற்குள் பாதுகாவலர்கள் மற்றும் வழிகாட்டிகள் இருப்பதால், சுற்றுலா பயணிகள் தாக்கப்படுவது அரிதான நிகழ்வாகும்," என்று கென்ய வனவிலங்கு துறையின் செய்தி தொடர்பாளர் பால் உடோடா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கென்யாவுக்கு 14 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதன் மூலம் 1.2 பில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கென்யா: நீர் யானை தாக்கி சுற்றுலா பயணி பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவை, நீலகிரி, தேனியில் மழை நீடிக்கும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்