உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் பதவி விலகல்

World Bank President Jim Yong Kim resigns

உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் முதன்முறையாக இப்பதவிக்கு கிம் கொண்டு வரப்பட்டார். 2017ம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக தலைவர் பதவியில் தொடருகிறார்.

"தீவிர வறுமையை ஒழிப்பதற்காக அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணியாற்றும் ஊழியர்களோடு இணைந்து இந்த முக்கியமான நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் சேவைபுரிந்ததை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்" என்று கிம் கூறியுள்ளார். அவரது பதவிலகலுக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இரண்டாம் உலக போரால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்த ஐரோப்பிய நாடுகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக 1947ம் ஆண்டு உலக வங்கி உருவாக்கப்பட்டது. உலக வங்கியின் தலைவரை அமெரிக்க ஐக்கிய நாடுகளே நியமிப்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதைப்போன்று சர்வ தேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தலைமை பொறுப்புக்கு ஐரோப்பிய நாடுகளே தலைவரை தேர்ந்தெடுத்து வருகின்றன. வளரும் நாடுகள் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. 2012ம் ஆண்டில் நைஜீரியாவின் நகோஸி ஓகோஞ்சா லுவியலா என்பவரும் தலைவர் போட்டியில் குதித்தார்.

உயர்வருமானமுள்ள நாடுகளுக்கு வழங்கப்படும் கடன்களை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப்பின் விருப்பத்தின்பேரில் சீனாவுக்கு வழங்கப்படவிருந்த கடன்களை கிம் நிறுத்தினார். முதல் இருப்பை 13 பில்லியன் டாலர் உயர்த்தும்வண்ணம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் நிலக்கரி தொழிலுக்கு புத்துயிர் கொடுப்பதாக டிரம்ப் வாக்குக் கொடுத்திருந்த நிலையில், நிலக்கரி மின்னாற்றல் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி செய்வதை கிம் நிறுத்திவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரிய அமெரிக்கரான ஜிம் யோங் கிம் தென் கொரியாவின் சியோலில் பிறந்தவர். தற்போது 59 வயதாகும் கிம், மருத்துவம் படித்தவராவார். வரும் பிப்ரவரி 1ம் தேதி வரைக்கும் கிம் உலக வங்கியின் தலைவராக பணியிலிருப்பார். உலக வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகிய கிறிஸ்டலினா ஜார்ஜிவியா, இடைக்கால தலைவராக செயல்படுவார் என தெரிகிறது.

You'r reading உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் பதவி விலகல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்