கோபம், செண்டிமெண்ட் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 8

Bigg boss Day 8 review

by Mahadevan CM, Oct 13, 2020, 13:12 PM IST

லக்சரி பட்ஜெட் போட எல்லாரும் ரெடியானாங்க. சுரேஷ் சொன்ன மாதிரி இளமை டீம்ல அனிதா, சனம் எல்லாம் எழுத ரெடியாக, மொத்த லக்சரி பட்ஜெட்டும் கேஸ் அடுப்புல மீதி ரெண்டு அடுப்புக்கும், ஆண்கள் பெட்ரூமையும் திறந்து விடறதுக்கு சரியா போச்சுனு சொல்லிட்டாரு பிபி. ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்ல இருக்கும்போதே சனிக்கிழமையே கறிக்கடையை தேடி ஓடின மாதிரி ஓடினாங்க ஆண்கள் அணி.

கிச்சன்ல வழக்கம்போல கோயம்பேடு கூட்டம் இருந்தது. சுரேஷ் சமைச்சுட்டு இருந்தார், அந்த பக்கமா வந்த சனம்கிட்ட அந்த குக்கர் மூடியை எடும்மானு சொல்லப் போக, ஆரம்பிச்சது வினை. அப்புறம் 5 நிமிஷத்துக்கு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தார்கள். 6 மணி ஆனா சரக்கடிக்க கை நடுங்கறா மாதிரி, பொழுது விடிஞ்சா ஏதாவது பஞ்சாயத்து பண்ணலேன்னா சனம்க்கு கை நடுங்கும் போல கேப்டன் என்றும் பாராமல் வம்பிழுத்துட்டு வந்து அனிதா கிட்ட புலம் பிட்டு இருந்தாங்க. என்னை எல்லாரும் சரியா தப்பா புரிஞ்சுக்கறாங்கனு புலம்பினதை புதுசா பிக்பாஸ் பார்க்கறவன் கூட நம்ப மாட்டான்.

இந்த சீசனோட முதல் நாமினேஷன் ஆரம்பமாச்சு. கடந்து வந்த பாதை கதைல தகுதியில்லாதவங்கனு சொல்லப்பட்டவங்க பேரை தான் நாமினேஷன் செய்யனும். எல்லாரும் வகை தொகை இல்லாம சனம் பேரை சொன்னாங்க. நாமினேஷன் அன்னிக்காவது அமைதியா இருந்திருக்கலாம். அடுத்த இடத்துல ஷிவானியும், ரேகாவும் இருந்தாங்க.அடுத்த இடத்துல சம்யுக்தா இருந்தது ஆச்சரியம்.

பாலாஜி சனம் பேர் தான் சொல்லுவான்னு தெரியும். ஆனா சனம் அக்கானு சொல்றான். வாட் தி டக்கு. ரம்யாவையும், சம்யுக்தாவையும் நாமினேட் செஞ்சாங்க ரேகா. சம்யுக்தா 4 வயசு பையனை விட்டுட்டு வந்துருக்காங்களாம், அதனால அவங்க வீட்டுக்கு போகனுமாம். ரம்யாவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் கொட்டி கிடக்குதாம்.அதனால அவங்களையும் வீட்டுக்கு அனுப்பனும்னு சொன்ன போது சூர்யவம்சம் டெம்ப்ளேட் மாதிரி நான் கண்ணை துடைச்சுகிட்டேன்னு சொன்னா நீங்க நம்பனும்.

சுரேஷ் அனிதா பேரை சொல்லுவாருனு நினைச்சா யூ டர்ன் போட்டுட்டாரு. மொத்தம் 15 பேர்ல 11 ஓட்டுகள் வாங்கி முதலிடம் பிடித்தார் சனம். ஆக மொத்த ஹவுஸ்மேட்ஸையும் கதற வச்சுருக்காங்க. எலிமினேஷன்ல தபிச்சா என்னையாடா நாமினேட் செய்யறிங்கனு வனிதாவதாரம் எடுக்க வாய்ப்பு இருக்கு.அடுத்து இருந்திருந்தாப்ல பேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சாங்க. வித விதமா ட்ரெஸ் என்ன, மேக்கப் என்ன...இதுக்கு ரெடியாகவே 2 மணி நேரம் ஆகிருக்கும் போல. இந்த போட்டிகளுக்கு நடுவர்களா சனம், பாலாஜியை ஜோடி சேர்த்து விட்ருக்காங்க.

பழக்க தோஷத்துல ரியோ தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல்ல ராம்ப் வாக். எல்லாரும் வரிசையா நடந்தாங்க. அடுத்து தனித்திறமை போட்டி கேப்பி டான்ஸ் ஆடினாங்க. ரமேஷ் ஒரே ஸ்டெப்பை திரும்பப் திரும்ப போட்டு ஆடி மூச்சு வாங்க உக்காந்தாரு. அனிதா 3 நிமிஷம் மூச்சு விடாம தமிழ் பேசினாங்க. இந்த நிகழ்ச்சிக்காகத் தயார் செய்யப்பட்ட உரையா? இல்ல ஏற்கனவே பல மேடையேற்றப்பட்ட உரையானு தெரியல. எப்படியிருந்தாலும் சூப்பர் பர்பாமன்ஸ். அடுத்து நம்ம சுரேஷ் வந்து பரத நாட்டியம் எப்படி கண்டுபிடிச்சுருப்பாங்கனு நடிச்சு காமிச்சது அட்டகாசம். வாவ் ரகம். இந்த பிரிவுல மத்தவங்க யாரும் வரலை. அனிதாவும், சுரேஷும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

அடுத்ததா நடுவர்கள் கேள்விக்கு பதில் சொல்லனும்

நீங்க பிக்பாஸ் வெற்றியாளரா தேர்ந்தெடுக்கப்பட்டா உங்களுடைய எந்த முகத்துக்காக தேர்ந்தெடுக்கனும்னு விரும்பறிங்கனு கேட்கவும். இப்ப நான் காமிக்கற இந்த முகத்தைப் பார்த்து, நான் ஒரு ஜெண்டில்மேன்னு சொல்லி கொடுத்தா நான் சந்தோஷப்படுவேன்னு சொல்லிட்டு உக்காந்துட்டாரு.

உன்னை முன்னுதாரணமா எடுத்துகிட்டு என்ன குவாலிட்டிக்காக எடுத்துக்கனும்னு நினைப்பீங்க ஷிவானி கிட்ட கேட்டு வைக்க, அந்த பொண்ணும் விவேகானந்தரை இழுத்து, நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய், அதனால யாரையும் முன்னுதாரணமா நினைக்க வேண்டாம்னு சொல்லிருச்சு.வாழ்க்கையில ஏற்றத்தாழ்வை எப்படி எடுத்துக்கறீ ங்கனு ஜித்தன் ரமேஷுக்குனே டிசைன் பண்ணின கேள்வியை கேட்க, அவரும் பகுமானமா ஒரு பதிலைச் சொல்லி வச்சாரு.

அடுத்து சம்யுக்தா. சிங்கிள் மதரா எப்படி உங்க கேரியரையும், குழந்தையையும் பார்த்துக்கறிங்கனு கேக்கவும், நான் சிங்கிள் இல்ல, மேரீட் தானு சொன்னாங்க. கல்யாணம் ஆகி குழந்தையோட தனியா இருந்தா சிங்கிள் மதர்னு சொல்லக்கூடாதா? எந்த உடை அணிந்தாலும் பெண் என்பவள் பெண் தான்னு ஏற்கனவே ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தாங்க. என்ன வேலை பார்த்தாலும் குழந்தை வளர்ப்பு தான் முக்கியம்னு சொல்லிட்டாங்க.

அடுத்து நம்ம கேப்டன். உங்களுக்குக் கொளுத்தி போடறது பிடிக்கும் இல்லையா, அதனால அதே மாதிரி ஒரு கேள்வி கேக்கறேன். "இந்த வீட்ல யாரெல்லாம் முகமூடி அணிந்தவர்கள் ஒரு கேள்வி. நியாயமா இந்த மாதிரி போட்டிகளில் பங்கேற்பாளர் பத்தி தான் கேள்வி கேக்கனும். இங்க அடுத்தவங்களை பத்தி கேள்வி. " இங்க எல்லாரும் முகமூடி போட்ருக்காங்க. நம்ம ரியோ தன்னோட முகத்தைப் பத்தி சொன்னா மாதிரி," அப்படினு சொல்லிட்டு இருக்கும் போதே, அங்க ரியோ டென்ஷனாகிட்டான். என்னை உதாரணம் எடுத்து பதில் சொல்லாதீங்கனு அப்ஜக்ட் பண்ணினான்.

திடீர் எதிர்த்தாக்குதலை எதிர்பார்க்காத சுரேஷ் ஆரம்பத்துல தான் அப்படினு மறுப்பு தெரிவிச்சாரு. ரியோ ஸ்ட்ராங்கா, கோபமா பேசவும் நான் உன்னைப் பாராட்டித் தான் பேசனேன்னு பல்டி அடிச்சுட்டாரு. அதுக்கப்புறம் அதையே மெயிண்டைன் பண்ணினாரு.. இருந்தும் ரியோவுக்கு கோபம் போகல. இந்த கோபமான முகத்தைத் தான் நான் காட்ட வேண்டாம்னு இருந்தேன். அதையும் காட்ட வச்சுட்டீங்கனு ரியோ வருத்தமும் பட்டான். நான் எல்லாத்தையும் எப்பவும் பாராட்டித் தான் பேசுவேன்னு சொல்லிட்டே அனிதாவைச் சாட்சிக்கு இழுக்க, அனிதா ஆளை விடுங்கடா சாமினு ஓடிருச்சு.

அந்த நிகழ்ச்சி முடியும் போதே 12 மணி. நிஷாவுக்குப் பிறந்த நாள்னு கேமரா மூலமா அம்மாகிட்ட பேசிட்டு இருந்தாங்க. உள்ள போனா கன்பெஷன் ரூம்ல இருந்து கேக் வந்தது. வெட்டி சாப்பிடும் போதே லைட்டா அழுத நிஷாவை பார்த்து பத்தாது, பத்தாதுனு ஒரு ஏவி ஒன்னை போட்டு அழ வைச்சாரு பிக்பாஸ். அம்மா செண்டிமெண்ட்ங்கறதால ஷிவானி அழ, குழந்தையைப் பார்த்து சம்யுக்தா அழ அப்படியே முடிஞ்சது நாள்.

You'r reading கோபம், செண்டிமெண்ட் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 8 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை