சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், கிண்டி, குரோம்பேட்டை, முடிச்சூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர், அடையார் உள்பட பரவலாக பல இடங்களிலும் இன்று காலையில் மழை பெய்தது.
சென்னையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக சரிவர குப்பைகளை அள்ளாமல், குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. அதனால், சாலைகளிலும் குப்பைகள் சிதறிக் கிடந்தன. நல்ல நாளிலேயே குப்பை அள்ளாத மாநகராட்சி ஊழியர்களும், அதை கண்காணிக்காமல் அலுவலகத்தில் அமர்ந்து அரசியல் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும் மழை நேரத்தில் ஓடி, ஓடி உழைக்கப் போகிறார்களா, என்ன?
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, சாலைகளில் இருந்த குப்பைகளையும் தள்ளிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.
சில பகுதிகளில் மட்டும் மழையிலும் குப்பைகள் அள்ளப்பட்டு வருகின்றன. இதையும் தாண்டி, கே.கே.நகர் உள்பட சில இடங்களில் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி விட்டு, புதிதாக பெரிய குழாய்களை பதிக்கும் பணிக்காக சாலையோரங்களில் பெரும் பள்ளம் தோண்டிப் போட்டு ஒரு வாரமாக மூடாமல் வைத்திருக்கிறார்கள். அதனால், சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், பள்ளங்களில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியும் அமோக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தத்தில் சாதாரண மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னையே இந்த லட்சணம் என்றால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் என்ன நிலைமை இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.