விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. நாசா கைவிரிப்பு

by எஸ். எம். கணபதி, Sep 19, 2019, 11:49 AM IST

சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக விக்ரம் லேண்டருடன் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ) விண்ணில் ஏவியது. கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்2, விண்ணில் ஏவப்பட்டது முதல் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகள் தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்தனர். இம்மாதம் 7ம் தேதியன்று நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படும் போது, லேண்டருடன் இஸ்ரோ கட்டுப்பாட்டறை தொடர்பு துண்டித்து போனது.

இந்நிலையில், சந்திரயானின் ஆர்பிட்டரில் இருந்து லேண்டருடன் இருந்த தொடர்பு மூலம் லேண்டரைப் பற்றிய தகவல்களை இஸ்ரோ பெற்றது. எனினும், லேண்டருடன் தொடர்பு துண்டானதால், அதன் மூலம் சந்திரனின் மேற்பரப்பு படங்களையும், ஆய்வு தகவல்களையும் பெற முடியவில்லை.

இதற்கிடையே, நாசாவின் ஆர்பிட்டர் மூலமாக லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ முயற்சித்தது. இதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவி கோரப்பட்டது. நாசாவும் சந்திரனைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடித்து தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது.

தற்போது, நாசாவின் பொது தொடர்பு அதிகாரி ஜோசுவா ஹேண்டல் அனுப்பியுள்ள இ-மெயிலில், சந்திரனை சுற்றி வரும் நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர், கடந்த 17ம் தேதியன்று விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட பகுதிக்கு மேல் சென்றது. அப்போது சந்திரனில் எடுக்கப்பட்ட படங்களில், விக்ரம் லேண்டர் தெரியவில்லை. லேண்டர் தரையிறக்குவதற்காக திட்டமிடப்பட்ட இடத்தில், அது இல்லை. அதே சமயம், எல்ஆர்ஓ ஆர்பிட்டரின் கேமராவில் பதிவான படங்களில், அந்த பகுதியில் மிகப்பெரிய நிழல் தென்படுகிறது.

ஒரு வேளை, அது விக்ரம் லேண்டரின் நிழலாக இருக்கலாம். லேண்டர் வரும் 21ம் தேதிக்குள் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவில் சிக்கினால் மட்டுமே அது பற்றிய தகவல்கள் கிடைக்கும். வரும் 21ம் தேதி சந்திர இரவு தொடங்குவதால், அதற்கு பிறகு எடுக்கப்படும் படங்களில் தெளிவு இருக்காது என்று தெரிவித்துள்ளார். எனவே, லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


More India News