தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இது அமைந்துள்ள மொத்தம் 7 லட்சத்து 52 ஆயிரம் சதுர அடி நிலத்தை தமிழக அரசிடம் இருந்து வாடகை அடிப்படையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் இணைந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றன. இந்த மைதானத்தில் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்கான வருவாயை அவையே வைத்து கொள்கின்றன.
கடந்த 1995ம் ஆண்டு குத்தகை ஒப்பந்தம் செய்த போது, முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை என்றும் அதன்பிறகு வாடகை உயர்த்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 2000ம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு வாடகையை எவ்வளவு உயர்த்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. 2015 ஆண்டு ஏப்ரலுடன் குத்தகை ஒப்பந்த காலமும் முடிந்து விட்டது. மீண்டும் மறு ஒப்பந்தமும் போடப்படவில்லை.
இந்த வகையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வாடகைப் பாக்கியாக ரூ.2081 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது என்றும் தமிழக அரசு இத்தொகையை வசூலிக்காமல் அலட்சியமாக உள்ளது என்றும் தணிக்கை அறிக்கையில்(சி.ஏ.ஜி) தெரிவிக்கப்பட்டது. இந்த சி.ஏ.ஜி ரிப்போர்ட் கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் சட்டசபையில் கூட தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த வாடகைப் பாக்கியை வசூலிக்கவே இது வரை வசூலிக்கவே இல்லை. அதே சமயம், சாதாரண சலுான் கடைக்காரரோ, அயர்ன் கடைக்காரரோ ஐநூறு ரூபாய் மின்சார கட்டண பாக்கி வைத்திருந்தால், மின்சார வாரிய ஊழியர் வந்து கெட்டகெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிவிட்டு பியூஸை பிடுங்கி விட்டு போவார்.
இந்த சூழ்நிலையில், தற்போது திடீரென ரூ.2081 வாடகைப் பாக்கியை தமிழக அமைச்சரவை கூடி வெறும் ரூ.250 கோடியாக குறைத்து நிர்ணயிக்க பேரம் பேசப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுவது போல் அவரது குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து, ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி!
அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக?
'கமிஷன், கரப்ஷன், கலக்ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?
இ்வ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.