செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து சசிகலா வாங்கிய 2 ஷாப்பிங் மால்..

by எஸ். எம். கணபதி, Dec 21, 2019, 11:31 AM IST

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, அந்த சமயத்தில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொண்டு 2 ஷாப்பிங் மால் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருக்கிறார்.

அதாவது, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம்மால், மதுரை கே.கே .நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு பேப்பர் மில், 50 காற்றாலைகள், புதுச்சேரியில் ஒரு ரிசார்ட் ஆகியவற்றில் அவர் பெரும் பங்குகளை வாங்கியிருக்கிறார்.
இதை கண்டுபிடித்த வருமானவரித் துறையினர், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, சசிகலா வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமான மதிப்பீடுகளை வருமான வரித் துறையினர் மேற்கொண்டனர்.

இதையடுத்து, 2012-13 முதல் 2017-18ம் ஆண்டு வரையான வருமான மதிப்பீடு உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட தமது உறவினர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரி, ஐகோர்ட்டில் சசிகலா தரப்பில் 6 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்ேபாது வருமான வரித் துறையின் சார்பில் வழக்கறிஞர் ஏ.ஆர்.சீனிவாஸ் ஆஜராகி, மனுதாரரின் வருமான மதிப்பீட்டு உத்தரவுகளை ஏற்கனவே தயாரித்து துறையின் இணையளத்தில் வெளியிட்டு விட்டதாகவும், மனுதாரர் அதை பார்த்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அவரது செல்போனில் 2 தாள்கள் போட்டோ எடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாள்களில் பெரிய நிறுவனங்களின் பெயர்களும், அவற்றின் மூலம் சொத்துகள் வாங்க அளிக்கப்பட்ட பண விவரமும் இருந்தது. இது பற்றி, விசாரித்த போது அந்த 2 தாள்கள் குறித்து தெரிய வந்தது.
ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது 2016 டிசம்பரில் வழக்கறிஞர் செந்திலிடம் இந்த குறிப்புகளை சசிகலா ஒப்படைத்துள்ளார். அவர் அவற்றை பத்திரமாக வைத்திருந்தார். சசிகலா கடந்த 2017 அக்டோபரில் கிருஷ்ணப்பிரியா வீட்டுக்கு பரோலில் வந்த போது அவரிடம் செந்தில் அந்த முதலீடு குறிப்புகள் அடங்கிய 2 தாள்களை கொடுத்திருக்கிறார்.

இதன்பின், வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வந்த போது அந்த தாள்கள் இல்லை. ஆனால், அவை கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் படம்பிடித்து வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருமான விவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாார்.

You'r reading செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து சசிகலா வாங்கிய 2 ஷாப்பிங் மால்.. Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை