மும்பை மாநகராட்சியில் 10 ரூபாய் சாப்பாடு.. சிவசேனாவின் அம்மா உணவகம்..

by எஸ். எம். கணபதி, Dec 21, 2019, 11:49 AM IST

மும்பை மாநகராட்சியில் 10 ரூபாய்க்கு 2 சப்பாத்திகளுடன் சாப்பாடு தரும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜெயலிதா ஆட்சியில் இருந்தபோது ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, மாநகராட்சி, நகராட்சிகளின் நிதியுதவியுடன் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இதில் 5 ரூபாய்க்கு புளிசாதம், லெமன்சாதம் போன்றவை விற்கப்படுகிறது. மாலையில் சப்பாத்தி உள்ளிட்டவையும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஏழை மக்கள் இவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். பணக்காரர்கள் கவுரவம் கருதி இங்கு செல்வதில்லை. இதனால், பெரும்பாலும் போட்டியில்லாமல் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கிறது.

இந்த திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும், ஆளும்கட்சியினரின் மெகா சுருட்டல் ஒரு புறமிருந்தாலும் ஏழைகளுக்கு பயனளித்து வருகிறது. இதைப் பார்த்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த போது, அன்னா கேண்டீன் என்று கொண்டு வந்தார். பிற மாநிலங்களும் இதை பின்பற்றத் தொடங்கின.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலின் போது சிவசேனாவின் தேர்தல் அறிக்கையில், மலிவு விலை உணவகங்களை திறப்போம் என்று கூறப்பட்டது. தற்போது முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். இதனால், அந்த திட்டத்தை முதல்கட்டமாக மும்பை பெருநகர மாநகராட்சியில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

இதன்படி, அந்த மாநகராட்சி கேண்டீனில் ரூ.10க்கு சாப்பாடு விற்கும் திட்டம் டிச.19ல் தொடங்கப்பட்டது. இதில் 2 சப்பாத்திகள், சாதம், பருப்பு, 2 காய்கறிகள் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக, மாநகராட்சி ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் இது விற்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக, பொது மக்களுக்கு இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்நாகர் தெரிவித்தார். சிவசேனா தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


More Mumbai News