வங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..

by எஸ். எம். கணபதி, Oct 8, 2019, 07:11 AM IST

விஜய் ஆன்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பார்த்திருப்பீர்கள். அதில், மிகப் பெரிய பணக்காரரான விஜய் ஆன்டனி, பிச்சைக்காரனாக நடிப்பார். ஆனால், ஒரிஜனல் பிச்சைக்காரர் ஒருவர் வங்கியில் லட்சக்கணக்கில் போட்டு வைத்திருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?


மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.10 லட்சம் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல. மூட்டை மூட்டையாக சில்லரைக் காசுகளே ஒன்றே முக்கால் லட்சத்திற்கு வைத்திருந்தார்.

அந்த பிச்சைக்காரர் பெயர் பிராடிசந்த் பன்னாராம்ஜி ஆசாத். முதியவரான இவர் மும்பை கோவன்டி பகுதியில் தங்கி, ரயிலில் தினமும் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். இதனால், கோவன்டி- மன்கார்டு இடையே செல்லும் ரயில்களில் ரெகுலராக பயணிப்பவர்களுக்கு இவர் ரொம்பவே பரிச்சயமானவர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இவர், கோவன்டி-மன்கார்டு இடையே ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். ஆதரவற்ற பிச்சைக்காரர் என்பதால், மாநகராட்சி பிரேத வண்டியை அழைத்து அவரை அடக்கம் செய்ய நினைத்தனர்.

ஆனால், அவர் வைத்திருந்த அழுக்கு மூட்டைகளில் 2 வங்கி பாஸ்புக் மற்றும் பணமும் இருந்தது. இதையடுத்து, போலீசார் அவர் வசித்த ஒரு வீட்டில் போய் சோதனை செய்த போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மொத்தம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்திற்கு வங்கி பிக்சட் டெபாசிட் ரசீதுகள் இருந்தன. ஏற்கனவே அவர் வைத்திருந்த 2 சேமிப்பு கணக்குகளில் ரூ.96 ஆயிரம் இருந்தது. இது தவிர அவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக சில்லரைக் காசுகள் இருந்தன. அந்த காசுகளை கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை எண்ணினார்கள். அதில் மட்டுமே ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
தற்போது அவரது மகன் ராஜஸ்தானில் இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளதால், அவரை தேடி கண்டுபிடித்து பணத்தை கொடுப்பதற்கு மும்பை போலீசார் முயன்று வருகிறார்கள்.


More Mumbai News

அதிகம் படித்தவை