மும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது

by எஸ். எம். கணபதி, Oct 4, 2019, 12:16 PM IST
Share Tweet Whatsapp

மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில்(பி.எம்.சி.), வராக்கடன்களை ஆய்வு செய்ததில், கடன் கணக்குகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் மீது சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதையடுத்து, அந்த வங்கியில் டெபாசிட் வைத்திருந்தவர்கள் தங்கள் கணக்குகளை முடித்து கொள்ள முயன்றனர். இதனால், வங்கியில் குழப்பம் ஏற்பட்டு, டெபாசிட்தாரர்களுக்கு முழுப் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.எம்.சி வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் சுமார் 73 சதவீதத்தை, ஹவுசிங் டெவலப்மெண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்(எச்.டி.ஐ.எல்) என்ற கம்பெனி, முறைகேடாக பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனியின் இயக்குனர் ராகேஷ்குமார் வாதவன், அவரது மகன் சாரங்க் வாதவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் உள்ள கடன் ரூ.4355 கோடி என்றால், அதில் ரூ.2,146 கோடி கடன்களை வாதவன்கள் பல்வேறு போலி கணக்குகள் மூலமாக பெற்று மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், வாதவன்களுக்கு தொடர்புடைய 6 இடங்களில் இன்று ரெய்டு நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Leave a reply