அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா குரூஸ் பகுதியில் வசித்த அமெரிக்க இந்தியர் துஷார் அட்ரே(50). இவர் அட்ரே நெட் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். பெரிய கோடீஸ்வரர்.
கடந்த 1ம் தேதியன்று காலையில் இவரது வீட்டுக்குள் திடீரென ஒரு கும்பல் நுழைந்தது. ஐந்தாறு பேர் கொண்ட அந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பெண் நண்பரின் பி.எம்.டபிள்யூ காரில் போட்டு, காருடன் கடத்தினர்.
இதை கவனித்த சிலர், உடனடியாக 911 போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து தகவல் அளித்தனர். போலீசார் உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சான்டா குரூஸ் மலைப்பகுதியில் ஒரு பி.எம்.டபிள்யூ கார் நீண்ட நேரமாக கேட்பாரின்றி நிற்பதை போலீசார் கவனித்து அருகே சென்று பார்த்தனர். அந்த காரில் துஷார் அட்ரே இறந்து கிடந்தார்.
கொள்ளையர்கள் அவரை கடத்திச் சென்று பணம் பறித்து விட்டு, கொலை செய்து போட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.