மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா? எதிர்ப்பால் வேட்பாளர் மாற்றம்..

by எஸ். எம். கணபதி, Oct 4, 2019, 09:34 AM IST
Share Tweet Whatsapp

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தாதாவான சோட்டா ராஜனின் தம்பிக்கு சீட் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே கட்சியான குடியரசு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பாளர்களை அந்த கட்சி நேற்று முன் தினம் அறிவித்தது. பால்டன் தொகுதியில் தீபக் நிகால்ஜே என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. தீபக் நிகால்ஜே, மும்பையில் பிரபல அன்டர்வேர்ல்டு தாதாவாக விளங்கிய சோட்டாராஜனின் தம்பியாவார். சோட்டாராஜன் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கிறார்.

தாதாவின் தம்பியை வேட்பாளராக அறிவித்ததற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால், இந்த வேட்பாளரை மாற்றுமாறு அதவாலேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, பால்டன் தொகுதியில் தீபக் நிகால்ஜே மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக திகம்பர் அகவானே போட்டியிடுவார் என்று அக்கட்சி நிர்வாகி அவினாஷ் தெரிவித்திருக்கிறார்.


Leave a reply