பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக அரசிடம் என்ன கோரிக்கைகள் வைத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை அவர்கள் வாய்ச்சொல்லில்தான் வீரர்களாக இருக்கிறார்கள். சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் முட்டை அழுகிய முட்டையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
நீங்கள் பாஸ்ட்புட் போல் கட்சி நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அவர்களும் என்னை போல ஒரு உணவகத்தைத் தான் நடத்துகிறார்கள். அதனால் போட்டி பொறாமையில் அப்படி சொல்லியிருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையா, இது கலாசார சீரழிவு என்றும் கூறியிருக்கிறார். இந்த ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது என்று பதிலளித்தார்.
பிரதமர் தமிழில் பேசியது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்வதற்கான முயற்சி என்கிறார்கள். அது தவறில்லை. நாகாலாந்துக்கு போனால், அங்குள்ள தொப்பி போட்டு கொண்டு ஆடுவதில்லையா? அதைப் போல தமிழ் பெருமைகளை சில நாட்கள் தூக்கிப் பிடிக்கட்டும் என்றார்.