நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் ரயில்வே துறை மட்டுமே இது வரை ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், தனியார் ரயில்களை அனுமதிக்க முடிவு செய்து அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே உள்பட அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகத்திடமும் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்கலாம் என்று ரயில்வே தலைமை அலுவலகம் கேட்டிருக்கிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு நாட்டின் முதலாவது தனியார் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை இன்று(அக்.4) அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயில்வே துறைக்கு டிக்கெட் புக்கிங்கை கவனித்து வரும் ஐஆர்சிடிசி இந்த ரயிலை இயக்குகிறது.
இந்த ஐஆர்சிடிசி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஏ.சி. சேர்கார் ரயிலாகும். இதில், பல்வேறு சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்படும். ரயில் தாமதமாக சென்றால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 என்று பணம் திருப்பித் தரப்படும். மேலும் பல வசதிகளும் உள்ளது.
இதைத் தொடர்ந்து, 50 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை-நாகர்கோயில், சென்னை-கோவை போன்ற வழித்தடங்களில் தனியார் ரயில் இயக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.