குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் ஆங்காங்கே இஸ்லாமிய அமைப்புகளும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் இன்று காலை சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. இதில், மற்ற கட்சிகளும், மற்ற அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், போலீசார் அனுமதி மறுத்திருந்தாலும், பேரணிக்கு ஐகோர்ட் தடை விதிக்காததால் திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதன்படி, காலை 10.30 மணிக்கு எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து பேரணி தொடங்கியது.
பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் முதல் வரிசையில் கையில் பேனர் ஏந்தியபடி நடந்து சென்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோரும் பேரணியில் நடந்து சென்றனர்.
மேலும், பல்வேறு மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பேரணியில் வந்தவர்கள் கொண்டு வந்த பேனர்களில், இஸ்லாமியர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த பா.ஜ.க, அதிமுக அரசுகளை கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் மாபெரும் பேரணி என்று எழுதப்பட்டிருந்தது.
பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்னம் ஸ்டேடியத்திற்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்டாலின், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் நின்றபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், இது பேரணி அல்ல. போர் அணி. இந்த போரணியில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும், அரசியல்சார்பற்று அனைத்து தரப்பினரையும் அழைத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.