அனுமதியின்றி பேரணி.. ஸ்டாலின் உள்பட 8000 பேர் மீது வழக்கு

by எஸ். எம். கணபதி, Dec 24, 2019, 14:46 PM IST

போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானதாக உள்ளதாக குற்றம்சாட்டி, நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடியாக, பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பேரணிகளும் நடத்தப்படுகின்றன.
சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நேற்று(டிச.23) பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழும்பூரில் இருந்து ராஜரத்னம் ஸ்டேடியம் வரை நடந்த பேரணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க, கொமதேக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தும் பேரணி நடைபெற்றது. வழக்கமாக, பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டால் பேரணி தொடங்கும் முன்பே அனைவரும் கைது செய்யப்படுவார்கள். ஆனால், திமுக கூட்டணி பேரணியை போலீசார் தடுக்கவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எட்டாயிரம் பேர் மீது இ.பி.கோ.143, 188, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலைய போலீசார், இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.