குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானதாக உள்ளதாக குற்றம்சாட்டி, நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடியாக, பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பேரணிகளும் நடத்தப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். தினமும் கொல்கத்தாவில் பேரணிகளை நடத்தி வருகிறார். இதற்கு பதிலடியாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. இதில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
இந்நிலையில், மேற்கு வங்க பாஜக துணை தலைவரும், நேதாஜியின் பேரனுமான சந்திரகுமார் போஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் முஸ்லிம்களை சேர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக சார்பில் பேரணி நடத்திய நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மதரீதியானது அல்ல என்றால், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும். முஸ்லிம்களை சேர்க்காதது ஏன்? என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், முஸ்லிம்கள் அந்த நாடுகளில் துன்புறுத்தப்படவில்லை என்றால் ஏன் இங்கு வந்திருக்கப் போகிறார்கள். அவர்களை சேர்ப்பதில் எந்த இடையூறும் வரப்போவதில்லை. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் வசிக்கும் பலூசிஸ்தான் மற்றும் அகமதியர்களுக்கு எதிரான நிலை என்ன? என்று தெரிவித்துள்ளார்.