குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் பிரம்மாண்ட பேரணி.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 28, 2019, 15:26 PM IST

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தானில் இருந்து 2014க்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் (என்.ஆர்.சி) கொண்டு வரப் போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆலந்தூர் நீதிமன்றம் அருகே பேரணி புறப்பட்டது. அந்த அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அந்த அமைப்பின் தலைவர் சம்சுல்லுகா, தலைமைதாங்கினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நடத்தப்பட்ட இந்த பேரணி மிகவும் பிரமாண்டமாக இருந்தது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். பேரணியில் சென்றவர்கள் 650 அடி நீளத்திற்கு தேசிய கொடியை கொண்டு சென்றனர்.

பேரணியில் சென்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். மேலும் கைகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரிய பேனர்களை கொண்டு சென்றனர். தில்லையாடி வள்ளியம்மை சுரங்கப்பாதை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். அதன்பிறகு, அங்கு தலைவர்கள் பேசினர்.
இந்த பேரணியால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அசோக்பில்லர் முதல் விமான நிலையம் வரையும், சைதாப்பேட்டை முதல் கிண்டி வரையும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. போக்குவரத்து திருப்பி விடப்பட்ட பகுதிகளிலும் நீண்ட நேரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Chennai News

அதிகம் படித்தவை