அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித் துறை இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் நேற்று(டிச.27) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், வரும் 16ம் தேதியன்று டெல்லி தல்காட்டாரா விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த உரையை மாணவர்கள் கேட்பதற்கு பள்ளிகளில் வீடியோ ஒளிபரப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், விடுமுறை நாளான அன்று மாணவர்கள் வந்து பிரதமரின் உரையை கேட்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், பொங்கல் விடுமுறை நாளில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்து பிரதமரின் உரையை கேட்கச் சொல்வது கண்டிக்கத்தக்கது என்றும் இதை திரும்பப் பெறாவிட்டால் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முன்பாக திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் கூறியிருந்தார்.
இதன்பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர், வரும் 16ம் தேதி விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் வீட்டில் இருந்தே டி.வி.யில் பிரதமரின் உரையை கேட்கலாம் என்றும் விளக்கம் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்?. முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது!
எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.