சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார்.
இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) ஞாயிறு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் காலை 11 மணியிலிருந்தே தேர்வு மையத்தினுள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலை முன்னிட்டு மாணவ மாணவியர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கையுறைகள் மற்றும் முகத்திற்கான தடுப்பும் (ஃபேஸ் ஷீல்ட்) அணிந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னையிலுள்ள மையம் ஒன்றுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து மாணவி ஒருவர் வந்தது அங்கிருந்தோரை திகைக்க வைத்தது. அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
விமானப் படை அதிகாரியான ஷியாம் தேவ் சர்மா கடந்த ஆகஸ்ட் மாதம் தாம்பரம் விமானப் படை தளத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவரது மகள் கீதாஞ்சலி சர்மா, நீட் தேர்வு எழுதுவதற்கு ராஜஸ்தானிலுள்ள கோட்டா மையத்தை தெரிவு செய்திருந்தார். ஷியாம் தேவ், தாம்பரம் மாற்றலாகியதையடுத்து கீதாஞ்சலி தன் தேர்வு மையத்தை சென்னைக்கு மாற்றினார். சென்னையில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கீதாஞ்சலி கவச உடை அணிந்து வந்துள்ளார்.