சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறன்று இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அருகிலிருந்தவர்கள் சீருடையில் இருந்த போலீஸை நையப் புடைத்துள்ளனர். அவர் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நூறு அடி சாலையில் அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே ஞாயிறன்று இரவு 10 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்கா காத்து நின்றுள்ளார்.
அந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் அவர், பணி முடித்து வீட்டுக்குத் திரும்புவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வருமாறு அப்பெண்ணை அழைத்துள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் இறங்கி வந்து அப்பெண்ணின் கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு இழுத்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணும் அவர் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணும் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர். அருகிலிருந்தவர்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தபோது, கையைப் பிடித்து இழுத்தவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.
அவர் காவலர் சீருடையில் இருந்துள்ளார். பொதுமக்கள் அவரை நையப்புடைத்துள்ளனர். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜீவ் என்ற போலீஸ்காரர் அரும்பாக்கத்தில் வசிக்கிறார். அவர் பணி நிமித்தம் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மது போதையில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்த அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் தாக்கியதில் காயமுற்றிருப்பதால் பெயிலில் அனுப்பப்பட்டுள்ளார்.