புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை மத்திய அரசிடமே திருப்பி அளிக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக ஜனாதிபதி மாளிகையை நோக்கி வந்த அவர்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் சமீபத்தில் தனது பத்மவிபூஷண் விருதைத் திருப்பி அளித்தார். இந்நிலையில், பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தனர். 35க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து விருதுகளை திருப்பி அளிக்கச் சென்றனர்.
கடந்த 1982 இல் அர்ஜூனா விருது பெற்ற கர்தார், 1987-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவரும், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்க பதக்கம் வென்ற குர்மெயின் சிங், மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ராஜ்பிர் கவுர் உள்ளிட்ட பலர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதில் குர்மெயின் சிங் ஏற்கெனவே தயான்சந்த் விருதும், ராஜ்பிர் கவுர், அர்ஜூனா விருதும் பெற்றவர்கள். ஆனால், இந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை போலீஸார் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்