இயக்குநர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றத் திரைப்படம் `அர்ஜூன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த இப்படம் தெலுங்கை தாண்டி தென்னிந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பேசு பொருளானது. இதனால் பல்வேறு மொழிகளில் ரீ மேக் உரிமைக்கான போட்டி அதிகமாக இருந்தது. அந்தவகையில் இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருந்தவர் கேரள தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா. இவரும் நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் விக்ரமின் மகன் துருவ்வை இந்தப் படத்தின் ரீ மேக் மூலம் நடிகராக அறிமுகப்படுத்த தீர்மானித்தனர்.
சேது படத்தின் மூலம் தனக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த இயக்குநர் பாலாவை வைத்து துருவ்வை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிய விக்ரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலாவை அர்ஜுன் ரெட்டி ரீ மேக்கை இயக்கும் படி கேட்டுக்கொண்டார். அப்படி உருவான `வர்மா' படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. படம் காதலர் தினமான இந்த மாதம் 14ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான E4Entertainment வெளியிட்டுள்ளது.
அதில், `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினல் படமான அர்ஜூன் ரெட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் பாலா கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் வர்மாவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை. இதனால் படத்தை ரீ ஷூட் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அந்தப் படத்திலும் துருவ்தான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், படத்தை பாலா இயக்கமாட்டார். அவருக்குப் பதிலாக இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார். அந்த இயக்குநர் யார் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இது எங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுங்கு பதிப்பின் கதைக்கருவை அப்படியே தமிழ் ரசிகர்களுக்குக் கொடுப்பதில்தான் எங்களுக்கு விருப்பம்" எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.