சினிமா துறை தமிழ் ராக்கர்ஸை விரோதியாகப் பார்க்காமல் அவனை நண்பனாக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தயாரிப்பாளர்களுக்கு பணம் ஈட்டி தர முடியும் என்பதை பார்க்க வேண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
இது குறித்து இரும்புத்திரை பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.கே.செல்வமணி, “இன்று படம் பார்க்கும் மக்களில் 30 சதவீத மக்கள்தான் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் ஆன்லைன், திருட்டு டிவிடி மூலம்தான் பார்க்கிறார்கள்.
இன்று இன்டர்நெட் வழியாக மக்கள் இருக்கும் இடத்திற்கே படத்தை கொண்டு செல்கிறான் தமிழ் ராக்கர்ஸ். கடந்த 12 வருடமாக சிறிதும் பெரிதுமாய் பல்வேறு படங்களை வெளியான அன்றே வெளியிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டான் தமிழ் ராக்கர்ஸ்.
தமிழ் சினிமாத் துறையிடம் இருந்து உனக்கு ஒன்பது சத்வீதம், எனக்கு ஒன்பது சதவீதம் என 18% ஜி.எஸ்.டியை பங்கு போட்டுக் கொள்ளும் மத்திய மாநில அரசுகள் இந்த துறையை கண்டுகொள்ளவில்லை.
ஆன்லைன் பைரசி என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே இன்டர்நெட் சேவையை பல நிறுவனங்களுக்கு பிரித்து தருவதே மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம்தான். அப்படியானால் ஒரு திருட்டுபொருளை பார்ப்பதற்கு அரசாங்கமே வழிவகை செய்து தருவது எவ்வளவு பெரிய குற்றம்.
எப்படி கள்ள சாரயத்தை ஒழிக்க அரசே சாராயத்தை விற்கிறதோ, அதேபோல் சினிமாத் துறை தமிழ் ராக்கர்ஸை விரோதியாகப் பார்க்காமல் அவனை நண்பனாக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தயாரிப்பாளர்களுக்கு பணம் ஈட்டி தர முடியும் என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கு இன்று எல்லாமே ஹோம் டெலிவரியாக வருகிறது அதேபோல் சினிமாவும் மக்களை சென்றடைய செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.