யார் இந்த `கேப்டன் மார்வெல் - திரை விமர்சனம்

Movie review captain marvel

by Sakthi, Mar 8, 2019, 17:53 PM IST

அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கேப்டன் மார்வெல் திரைப் படத்தின் மீது தான்... யார் அந்த கேப்டன் மார்வெல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். கேப்டன் மார்வெல் திரைக்கு வந்துவிட்டது. அவெஞ்சர்ஸின் முதல் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் படம் எப்படி இருக்கிறது?

கேப்டன் மார்வல்

கேப்டன் மார்வெல் பட விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஸ்பேக்....

மார்வெல் திரைப்படங்களில் சமீபத்திய பெரும் எதிர்பார்ப்பு, அவெஞ்சர்ஸ் திரைப்படத்துக்கு தான். அவெஞ்சர்ஸின் மூன்றாவது பாகமான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தின் க்ளைமேக்ஸில் வில்லன் தானோஸ் பாதி உலகை அழித்துவிடுவது போலவும், ஷீல்டின் தலைவரான நிக் ஃப்யூரி இறந்துவிடுவது போலவும் காட்டப்பட்டிருக்கும். உலகமும் பாதி அழிந்து கொண்டிருக்கிறது, நிக் ஃப்யூரியும் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் பேஜர் ஒன்றில் மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டுவிட்டு இறந்துபோவார் நிக். அவர் யாருக்கு மெசேஜ் அனுப்பினார் என்ற சஸ்பென்ஸோடு முடிந்திருக்கும் அவெஞ்சர் மூன்றாம் பாகமான இன்ஃபினிட்டி வார். இப்போ அவெஞ்சரின் இறுதிப்பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திற்காக காத்திருக்கிறோம். முன்னதாக, நிக் ஃப்யூரி மெசேஜ் அனுப்பியது கேப்டன் மார்வெலுக்கு. யார் இந்த கேப்டன் மார்வெல், அவரின் ஸ்டோரி என்ன? இந்த அவெஞ்சர் 4- க்கான அறிமுகமாகவே வெளியாகியிருக்கிறது இந்த கேப்டன் மார்வெல்.

இப்போ கேப்டன் மார்வெல் கதைக்குள்ள போகலாம்....

ஹாலா அப்படிங்கிற கிரகத்துல இருக்குற க்ரீ இனத்த சேர்ந்த பெண் தான் வெர்ஸ். நன்மைக்காக மட்டுமே போராடும் போர் வீரர்கள் இவர்கள். இவர்களோட எதிரி ஸ்க்ரல்ஸ். ஒருமுறை ஸ்க்ரல்ஸை அழிக்கிறதுக்காக அவங்க இடத்துக்குப் போராங்க வெர்ஸ் & டீம். அந்த சண்டையில வெர்ஸ் தொலைந்து போகிறாள். இறுதியாக பூமிக்கு வந்துசேர்கிறாள். அவளைத் தொடர்ந்தே ஸ்க்ரல்ஸூம் வருகிறார்கள். ஏன் பூமிக்கு வந்தாள், உண்மையிலேயே அவள் எந்த கிரகத்தைச் சேர்ந்தவள், ஸ்க்ரல்ஸ் அல்லது க்ரீ இவர்களில் யார் தீயவர்கள், அவெஞ்சருக்கும் மார்வெலுக்கும் என்ன சம்பந்தம் என அனைத்துக் கேள்விகளுக்கும் ஆக்‌ஷனோடு அதகளப்படுத்தியிருக்கும் படம் தான் கேப்டன் மார்வெல்.

கேப்டன் மார்வல்

கேப்டன் மார்வெல் ஒரு பீரியாடிக் பிலிம். ஷீல்டு தலைவரான நிக் ஃப்யூரியின் இளவயதில் நடப்பது போன்ற கதைக்களம். பூமியினுள் மற்ற வேற்று கிரக வாசிகள் புகுந்துவிடும் சமயத்தில் நிக் சந்திக்கும் முதல் ஹீரோவாக கேப்டன் மார்வெல் வருகிறாள். ஏனெனில் இவளை சந்தித்தபிறகு தான், இந்த உலகத்தை காப்பாற்ற துப்பாக்கிகளும், பீரங்கிகளும் மட்டும் போதாது. சூப்பர் ஹீரோக்கள் வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதனால் தான் அவெஞ்சர்ஸை உருவாக்குகிறார் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1995ல நடக்கும் கதைக்களம் என்பதால் அதற்கேற்றதுபோல போஜர், சிடி, விண்டோஸ் 98 கம்ப்யூட்டர்கள் என 90களின் அனைத்தையும் அப்படியே அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒண்டர் வுமன் திரைப்படம் வெளியாகும் போது கேல் கடோட்டை எப்படி ஈர்த்தாரோ, அதைவிட அதிகமாகவே ஈர்க்கிறாள் பிரை லார்சன். ஆஸ்கர் நாயகியான இவர், ஆக்‌ஷனிலும், அழகிலும், சிரிப்பிலும், அழுகையிலும் என ஒவ்வொரு காட்சியிலும் மனதில் நிறைகிறாள். ஹாலா கிரகத்தைச் சேர்ந்தவரில்லை என்பதை உணரும் இடங்களில், பூமியைச் சேர்ந்தவள் என்பதை கண்டுப்பிடிக்கும் போது, நிக் ஃப்யூரியை கிண்டல் செய்யும் இடங்கள் என காட்சிக்கு காட்சி அப்ளாஸ் தான்.

ஷீல்டின் தலைவராக எப்போதும் கடுகடு என இருக்கும் கதாபாத்திரத்திலேயே நிக்கை பார்த்திருப்போம். நிக் இளம் வயதில் குறும்பும், விளையாட்டுமாக இருப்பது, ஏலியன்ஸை முதன்முறையாக சந்திக்கும் இடம், ஃப்யூரிக்கு ஒற்றை கண் எப்படி பறிபோனது, பூனையுடனான காட்சி, அவெஞ்சர் என்கிற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை நாஸ்டாலஜிக்காக சொல்லியிருக்கு இடமென நிக் ஈர்க்கிறார்.

படத்தில் மற்றுமொரு முக்கிய கேரக்டர் டாக்டர் லார்சன். இவரைத் தேடியே வில்லன்களாக ஸ்க்ரல்ஸ் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் நிஜத்தில் வில்லன் லார்சன் என்பதை மார்வெல் கண்டுபிடிக்கும் இடம், ஹாலா கிரகத்தின் சுயநலத்திற்கு மார்வெலை பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் இடம் என திரைக்கதையில் எந்த குளப்பமும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் அதே கமெர்சியல், உலகை காப்பாத்தும் சூப்பர் ஹீரோ கதைதான் என்றாலும் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் குஷியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கேலக்ஸி விட்டு கேலக்ஸி தாண்டுவதாகட்டும், விமானத்தில் நடக்கும் சேசிங் காட்சிகளாகட்டும், க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியாகட்டும் காட்சியமைப்பிலும், விஸூவலிலும் மார்வெல் அசத்தல்.

கேப்டன் மார்வெலில் மற்றுமொரு ஸ்பெஷல் ஸ்டான்லிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை தான். மார்வெலின் லோகோ வரும்போது ஸ்டான்லியின் புகைப்படங்களை காட்டிய இடமாகட்டும், ஸ்டான்லி ஒரு காட்சியில் வந்து போகும் இடமாகட்டும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. விசில் பறக்கிறது....! நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டியவரே ஸ்டான் லீ!

ஆக, அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தில் கேப்டன் மார்வெல் இந்த உலகத்தை காப்பாற்றப் போகிறார் என்பது தெரிந்த செய்தி தான். ஆனால் எப்படியான ஆக்‌ஷன் காட்சிகளும், திரைக்கதைகளும் இருக்கப்போகிறது என்பதை பார்க்க இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்க தான் வேண்டும்.

You'r reading யார் இந்த `கேப்டன் மார்வெல் - திரை விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை