இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
மும்பையில் நடைபெற்ற 64 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர் , நடிகைகள் எனப் பலரும் பங்கேற்றனர் . விழாவில் பங்கேற்ற நடிகைகளான ஆலியா பட், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கத்ரினா கபூர், சோனம் கபூர், தீபிகா படுகோன், சன்னி லியோன் உள்ளிட்ட பலர் விதவிதமான ஆடைகளுடன் வந்து அரங்கில் போஸ் கொடுத்தனர்.
சஞ்சய் தத்தின் வாழ்க்கையை சித்தரித்த 'சஞ்சு'(Sanju) படத்தில் நடித்த ரன்பீர் கபூர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். 'பத்மாவத்'(Padmaavat) படத்தில் நடித்த ரன்வீர்சிங் சிறந்த நடிகராக விமர்சகர்களின் விருதுக்கு தேர்வு பெற்றார்.
சிறந்த நடிகையாக ராஜி(Raazi) படத்தில் நடித்த ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டார் . 'பதாய் ஹோ'(Badhaai Ho) படத்தில் முதுமைகாலத்தில் பிள்ளைப்பேறு அடையும் பெண்ணின் மன உளைச்சலை சித்தரித்த நீனா குப்தா விமர்சகர்கள் விருதுக்கு தேர்வு பெற்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருது 'பதாய் ஹோ'(Badhaai Ho) படத்தில் நடித்த கஜ்ராஜ் ராவ், மற்றும் '(Sanju) படத்தில் நடித்த விக்கி கௌஷால் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது . சிறந்த துணை நடிகைக்கான விருதினை 'பதாய் ஹோ'(Badhaai Ho) படத்தில் நடித்த சுரேகா சிக்ரி பெற்றார் .
ராஜி (Raazi) படத்தை இயக்கிய குல்சாரின் மகள் மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.இந்தப்படம் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டது .சிறந்த படத்திற்கான விமர்சகர்கள் விருது 'அந்தாதுன்'(Andhahun) படத்திற்கு வழங்கப்பட்டது. 'அந்தா துன்'(Andhahun) படத்தில் பார்வை தெரியாதவராக நடித்த ஆயுஷ்மன் குரானா சிறந்த நடிகராக விமர்சகர்களுக்கான விருது பெற்றார். சிறந்த புதுமுக நடிகையாக 'கேதர்நாத்' (Kedarnath) படத்தில் நடித்த சாரா அலிகான் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த விழாவில் விருது வாங்கும் போது ரன்பீர் மீதான காதலை வெளிப்படுத்தினார் ஆலியா பட். இதேபோல் ரன்பீர் விருது வாங்குவதற்கு முன்னதாக அவருக்கு முத்தம் கொடுத்தார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.