ஜானி படத்தில் நான் எழுதிய க்ளைமாக்ஸ் வைக்க சொல்லி கெஞ்சினேன்! - மகேந்திரன் பகிர்ந்த கசப்பு அனுபவங்கள்

Director Mahendran sharings

by Sakthi, Apr 2, 2019, 17:17 PM IST

தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் மகேந்திரன் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஜானி

அப்படியாக பத்திரிகையாளர் பெ. கருணாகரன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் இதோ..

``இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்  ஒருநாள் மாலை நேரம். இயக்குநர் மகேந்திரனின் மந்தைவெளி இல்லம். அவரை ஒரு சிறுகதைக்காகச் சந்தித்தேன். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சத்ய ஜித்ரே, அன்றைய இயக்குநர்கள், சினிமா போக்கு என்றெல்லாம் நிறைய பேசினார். பேச்சு தயாரிப்பாளர்களைப் பற்றித் திரும்பியது. மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் மகேந்திரன்.

ஒரு நல்ல இயக்குநருக்குத் தயாரிப்பாளர் அமைவது பெரிய வரம். படைப்பாளியின் கற்பனைக்கு உயிரூட்டுவதே பட்ஜெட்தான். தயாரிப்பாளர் சிக்கனம் என்ற பெயரில் செலவிட தயங்கவோ மறுக்கவோ செய்தால் அந்தப் படைப்பு முழுமையடையாமல் போய்விடும் என்றவர் தன்னுடைய அனுபவங்கள் சிலவற்றைச் சொன்னார். நினைவில் நின்றது மட்டும் இங்கே.

ஜானி படம். இரட்டை வேடத்தில் ரஜினி. இளையராஜா பாடல்களிலும் பின்னணி இசையிலும் ராஜாங்கமே நடத்தியிருந்தார். அந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் ஸ்ரீதேவி புயல், மழை நடுவே காற்றில் எந்தன் கீதம் பாடலைப் பாடுவார். நாம் படத்தில் பார்க்கும் காட்சிப்படி ஸ்ரீதேவி பாட வருவார். மழை பெய்த காரணத்தால் பார்வையாளர்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். ஆனால், மகேந்திரனின் ஒரிஜினல் கதைப்படி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கையில் குடை பிடித்தபடி ஸ்ரீதேவி பாடுவதைக் கேட்க வந்திருப்பார்கள். தயாரிப்பாளர் இந்த க்ளைமேக்ஸ் வேண்டாம். ஆயிரம் குடைகள் வாங்க லட்ச ரூபாய் ஆகும். நிறைய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் வேண்டும். அதனால் சாதாரணமாவே எடுத்துடுங்க… என்றாராம்.

ஜானி

மகேந்திரன் தயாரிப்பாளரிடம் ஆயிரம் குடை வாங்குவதுதான் உங்களுக்குப் பிரச்னை என்றால் நான் வீடு வீடாகப் போய் என் ரசிகர்களிடம் குடை இரவல் கேட்டு வாங்கி வருகிறேன். குடைக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டாம் என்று கெஞ்சினாராம். தயாரிப்பாளர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

இதை வேதனையுடன் சொன்ன மகேந்திரன் நான் நினைத்தபடி அந்தக் காட்சி வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆயிரம் வண்ண வண்ண குடையோடு மக்கள் நிற்பது எவ்வளவு பெரிய விஷுவல் இம்பேக்டை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறி பெருமூச்சு விட்டார்.

அடுத்து முள்ளும் மலரும். ரஜினி ஃபார்முலாவுக்குள் அடங்காத படம். படம் வளர வளர தயாரிப்பாளருக்கு அந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டதாம். படத்துக்கு விளம்பரமே தரவில்லை. பட ரிலீஸ் சமயத்தில் மகேந்திரன் தயாரிப்பாளரிடம் படத்துக்கு விளம்பரம் தரச்சொன்னாராம். தயாரிப்பாளர் கூலாகச் சொன்னாராம்.

ஓடுற படத்துக்கு விளம்பரம் தேவையில்லை… ஓடாத படத்துக்கு விளம்பரம் கொடுத்தும் பயனில்லை’’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

You'r reading ஜானி படத்தில் நான் எழுதிய க்ளைமாக்ஸ் வைக்க சொல்லி கெஞ்சினேன்! - மகேந்திரன் பகிர்ந்த கசப்பு அனுபவங்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை