பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிஎம் நரேந்திர மோடி படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், “எனக்கு சத்தியமா புரியலை, ஏன் சில பேர், ரொம்ப உணர்ச்சிவசப்படுறாங்கன்னு.. சீனியர் வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் போன்றவர்கள், ஏன் இந்த விவகாரத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரியவில்லை.
அவர்கள் படத்தை பார்த்து பயப்படுகின்றனரா? அல்லது மோடியின் சவுக்கிதார்(காவலாளி) பிரசாரத்தை பார்த்து பயப்படுகின்றனரா? என தெரியவில்லை.
மேலும், நாங்கள், இந்த படத்தின் மூலம் மோடியை ஹீரோவாக சித்தரிக்கவில்லை. அவர் உண்மையிலே ஒரு பெரிய ஹீரோதான், அவர் எனக்கு மட்டும் ஹீரோ அல்ல, நாட்டில் உள்ள பல கோடி பேருக்கு மோடி ஹீரோவாக உள்ளார்” என விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
நரேந்திர மோடியின் படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு தடை வாங்கிவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.