இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு தற்போது ஆவணப்படமாக எடுக்கப்படுகிறது.
1925ல் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். காந்தியைவிட நேருவின்மீதும், அவர் எழுத்துக்களின்மீதும் காதல் கொண்ட இவர் காங்கிரஸில் இணைந்தார். பின் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நல்லகண்ணு, 3 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்தார். தற்போது, மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார். ஊருக்கே தெரியும் அவர் பெயருக்கேற்ற நல்லவர் நல்லகண்ணு என்று. அதனால்தான், நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில் ஆவணப்படம் ஒன்று தயாராகிறது.
பொன். சண்முகவேலு இயக்கத்தில் `அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இந்தப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா வரும் மே 11ம் தேதி காலை சென்னையில் நடக்கிறது. இதை நடிகர் சூர்யா வெளியிடுகிறார். நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவர இருப்பது கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட்டுமல்லாமல் அவர் மேல் தீரா பற்று கொண்ட நலம்விரும்பிகள் மத்தியிலும் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.