குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது?
ஆறு அக்காக்களுக்கு கடைக்குட்டித் தம்பியாக வளர்கிறார் கெளதம்கார்த்திக். ஆறு சகோதரிகளும் சேர்ந்து தம்பி கெளதமை படிக்கவைத்து வக்கீல் ஆக்குகிறார்கள். ஆனால் தம்பியோ சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் வீரமான இளைஞன். எந்த இடத்தில் தப்பு நடந்தாலும் தம்ப்ஸ் அப் காட்டி தட்டி கேட்கிறார். அப்படியான ஒரு அநீதிக்கு எதிராக கெளதம் போராடும்போது, அது அவரையும் , அவர் குடும்பத்தையும் பாதிக்கிறது. பிறகு, அந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறான், நீதி வென்றதா என்பதே தேவராட்டம் படக்கதை.
முத்தையாவின் அதே குடும்ப பட ஃபார்முளாவில் உருவாகியிருக்கும் மற்றுமொரு படம். பொதுவாக இவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். இந்தப் படத்தில் அக்கா-தம்பி செண்டிமெண்ட். பேமிலி, காமெடி, பழிவாங்கும் படலம் என அதே அரைத்த மாவை இன்னும் மையாக அரைத்தெடுத்திருக்கிறார் முத்தையா. சாதியம் சார்ந்த படங்களை வெளிப்படையாக எடுக்கும் முத்தையா, மீண்டும் ஒருமுறை அழுத்தமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க போராடிவருகிறார் கெளதம்கார்த்திக். தாத்தா முத்துராமன், தந்தை கார்த்தி இருவருக்கும் கிடைத்த புகழும் பெருமையும் கெளதமுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைக்கவேண்டுமென்றால் கதையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் திரும்ப திரும்ப கெளதம் கதை தேர்வில் தோல்வியடைகிறார். நடிகராக வெற்றி பெற, நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும். நடிப்பில் சிறப்பான படம் என்று இதைச் சொல்லமுடியாது.
கெளதமுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்லுவதை விட அவ்வப்போது வந்து செல்கிறார் அவ்வளவே. பெரிதாக கவனம் ஈர்க்கும் எந்த காட்சியும் அவருக்கு இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூரியின் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. சிட்டி சப்ஜெட்டுகளில் சூரிக்கு காமெடி சல்ஃப் எடுக்காது. ஆனால் கிராமத்து கதைகளில் காமெடியில் தனித்து தெரிகிறார் சூரி. இந்தப் படம் அதற்கு ஒரு சான்று.
படத்தில் வில்லனாக வரும் ஃபெப்சி விஜயன், கெளதமின் மாமா போஸ் வெங்கட், அக்கா வினோதினி என அனைவருமே நடிப்பில் கச்சிதம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் ஓகே ரகம். பாடல்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
கெளதம் கார்த்தில் நடுரோட்டில் கொலை செய்கிறார். வில்லன்களும் கிடைக்கும் இடமெல்லாம் யாரையாவது தீர்த்துக் கட்டுகிறார்கள். ஆனால் போலீஸ் என்ன செய்கிறதென்று தெரியவில்லை.
படத்தில் காட்சிக்கு காட்சி வன்முறை வெடிக்கிறது. ஆனால் படத்துக்கு யு/எ சான்றிதழ். இப்படி பல கேள்விகளும் எழாமல் இல்லை. ‘என் மகன பார்த்தாலே போட்டுருவேன். நீ போட்டுருக்க பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா’, ‘பசி தெரியாம வளர்த்திருக்கோம்னு நினைச்சேன். இப்படி பயம் தெரியாம வளர்ந்திருக்கியேயா’னு எதுகை மோனையில் டயலாக்குகள் படம் முழுக்க ரசிக்கலாம்.
பலவீனமான திரைக்கதை என்றாலும் வேகமாக காட்சி நகர்வதால் அலுப்பு தட்டவில்லை. தேவராட்டம் என்கிற பெயரில் சாதியை தூக்கிப் பிடிக்கும் இப்படியான படம் தேவையா? என்று கேட்க தோன்றுகிறது. புதிதாக எந்த சமூக பிரச்னையை பேசியிருக்கிறது படம் என்று தெரியவில்லை. சாதியம் பற்றிய மக்களின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் சமூகத்தின் இளைஞர்கள் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பேசத் தொசங்கிவிட்டனர். இந்த சூழலில் சமூகத்தை மீண்டும் பின்னோக்கி நகர்த்தும்வண்ணம் சுயசாதி பற்றை வளக்கும் படங்களை எடுப்பதை முத்தையா போன்ற இயக்குநர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.