தமிழக அரசின் கலைமாமணி விருது, தகுதியானவர்களுக்கு கிடைக்குமாறு பரிந்துரை செய்வோம் என்று விஷால் அணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
தேர்தலில் விஷால் தலைமையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இவர்களை எதிர்க்க ஆளே இல்லாதது போல் தெரிந்தது. அதன்பிறகு, டைரக்டர் பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்ற பெயரில் புதிய அணி உருவாகியது. அந்த அணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க, பா.ஜ.க. ஆதரவு உள்ளது போல் தெரிகிறது. எனினும், விஷால் அணி களத்தில் வேகமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், விஷாலின் பாண்டவர் அணி வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு:-
நாங்கள் வெற்றி பெற்றால், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் மூல வடிவங்களை ஆய்வு நிபுணர்கள் குழு அமைத்து கண்டுபிடித்து வெளியிடுவோம். திரைப்படம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதை தடுக்க சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கப்படும்.
நாடக விழாக்கள், போட்டிகள், விருது விழாக்கள் ஆகியவற்றை நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் அரங்கேற்ற உதவுவோம். தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தகுதியான கலைஞர்களே பரிந்துரைக்கப்படுவார்கள். கடந்த 3 ஆண்டுகளில் எங்கள் அணியின் வெற்றிகரமான செயல்பாடுகளை உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும்.
இவ்வாறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.