யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜாம்பி படம் எப்படி இருக்கின்றது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
யூடியூபில் பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் மற்றும் அவர்களது நண்பர் ஒருவர், வீட்டில் மனைவி தொல்லை, கடன் தொல்லை, அந்த தொல்லை, இந்த தொல்லை என பல தொல்லைகள் மாட்டி முழிக்கின்றனர். அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணி, ஒரு பாரில் சரக்கடிக்கின்றனர்.
பின்னர், அருகில் இருக்கும் ரெசார்ட்டுக்கு செல்லும் அவர்களுக்கு, அங்கு எக்ஸ்ட்ரா தொல்லையாக, ரெசார்ட்டில் இருப்பவர்கள் எல்லாரும் ஜாம்பியாக மாறி கடிக்கின்றனர்.
இவர்களை யோகிபாபு காப்பாற்றினாரா? இல்லை அவரும் ஜாம்பியாக மாறி கடித்தாரா என்பதே மீதிக் கதை.
உலகளவில் ஜாம்பி படம் என்றாலே திகிலூட்டும் த்ரில்லர் படமாக எடுப்பதே வழக்கம்.
அந்த படத்தை காமெடியாக எடுக்க வேண்டும் என்ற இடத்திலேயே படத்தின் இயக்குநர் சறுக்கி விட்டார்.
யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி மட்டுமே படத்திற்கு ஒரு சில இடங்களில் கை கொடுத்தாலும், காமெடி கொஞ்சம் கூட படத்திற்கு கை கொடுக்கவே இல்லை. பதிலுக்கு, படம் பார்க்க சென்ற மக்களை ஜாம்பியை விட படம் மோசமாக கடித்து குதறி வைத்து விடுகிறது.
இதுக்கு அந்த ஜாம்பி என்னையே கடிச்சிருக்கலாம் என வெளியே வரும் மக்கள் கூறுவது தான் படத்தை காட்டிலும் சிரிப்பை ஏற்படுத்துகிறது.
யோகிபாபுவின் கால்ஷீட் கிடைத்து விட்டாலே ஒரு படத்தை எடுத்துவிடலாம் என எண்ணி எடுக்கும் பட வரிசையில் இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
யூடியூபில் காமெடியில் கலக்கி வரும் கோபி, சுதாகர் காமெடியும் படத்திற்கு எந்த இடத்திலும் கை கொடுக்கவே இல்லை.
இசைக்காட்டேரி என பெயரை வைத்துக் கொண்டு பிரேம்ஜி போட்டுள்ள இசை, மற்ற படங்களில் கேட்ட இசையை அப்படியே பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில் இந்த ஜாம்பி படத்தை மன தைரியம் இருப்பவர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம். மாடுலேஷன் முக்கியம் அமைச்சரே!
சினி ரேட்டிங் - 1.5/5.