கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்திற்காக எடுக்கபட்ட ‘மாணிக்ய மலரேயா பூவி’ என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவுகள் சமூக வலைதளங்களில் கண்ணாபிண்ணாவென வைரல் ஆனது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை பெற்றது.
கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரியா வாரியர் பிரபலமாகிவிட்டார். அதேபோல, தற்போது வரை 30 லட்சம் பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர். இந்நிலையில், தற்போது கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ளார்
இதற்கிடையில், பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் மற்றும் மும்பை போலீஸிடம் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘மாணிக்ய மலரேயா பூவி’ இறைத்தூதர் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி வருவதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, நடிகை பிரியா பிரகாஷ் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (20.2.18) மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், எந்தவிதக் காரணமுமின்றி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமையை முடக்கும் செயல். இதுபோன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று, உச்ச்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். அடுத்த கட்டமாக இந்த மனு விசாரிக்கப்படும் வரை எவ்வித கிரிமினல் விசாரணைகளும் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.