மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் உடற்கூராய்வுக்குப் பின், இந்தியா கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாளை காலை 11 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாடு முழுவதிலுமிருந்து, முன்னணி திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
இவர்கள் அந்தேரி ரிகிரியேசன் கிளப்பில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய ஸ்ரீதேவி, ஒட்டுமொத்த இந்திய திரை வானிலும் நட்சத்திரமாக ஒளி வீசினார். ஹிந்தி படங்கள் மூலம் பாலிவுட் ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றார்.பின்னர், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில், தான் தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் அறையில், குளியல் தொட்டி நீரில் மூழ்கி, ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
துபாய் நாட்டின் சட்ட விதிகளின்படி, மருத்துவமனையில் அல்லாமல் பிற இடங்களில் இறப்பவர்களின் உடல், தீவிர விசாரணைக்குப் பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல்கூராய்வு மற்றும் தடயவியல் சோதனையும் நடத்தப்படும்.
அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. எனினும், ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையையும் பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட கதவையும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், “ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது” என்று கூறி வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்வதாக செவ்வாய்க்கிழமை [27-02-18] அன்று துபாய் போலீஸார் அறிவித்தனர். ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தையும் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, எம்பார்மிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை விமான நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் மும்பை அந்தேரியில் உள்ள வீட்டிலும், பின்னர் புதன்கிழமை காலை 6 மணிக்கு ரிகிரியேசன் கிளப்பிலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இதனையடுத்து காலை 11 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும் இறுதிச் சடங்குகள் மாலை 03.30 மணியளவில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.