சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் என்று அந்நிறுவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கபாலி' திரைப்படத்துக்குப் பின்னர் சங்கரின் '2.0' திரைப்படத்தில் பிஸியாகி வந்தார். இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' உருவானது. வருகிற ஏப்ரல் 27-ம் தேதி 'காலா' ரிலிஸாகும் என ரிலீஸ் தேதியும் வெளியாகிவிட்டது.
இதுவரையில் தயாரிப்புப் பணிகளிலேயே இருக்கும் '2.0' படமும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்தின் அடுத்தத் திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகியது.
இந்த திரைப்படத்தை பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழின் முன்னணி கதாநாயகர்களான விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம், விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், தனுஷின் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது ரஜினிகாந்துடன் முதன் முறையாக கூட்டணி சேர உள்ளார்.