வட மாநிலங்களின் தாதா கலாச்சார பிரதிபலிப்பு - மிசார்புர் சீரிஸ் விமர்சனம்..

Misarpur Series Review

Aug 18, 2020, 21:20 PM IST

கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரே முடங்கிக் கிடக்கையில், பொழுதுபோக்கு தலங்களான தியேட்டர்கள், மால்கள் என அத்தனையும் மூடிக்கிடக்கின்றன. அந்த வகையில் இன்றைய பொழுதுபோக்கின் பிரதானமாகத் திகழ்கிறது OTT செயலிகள். மீடியாவை பொறுத்த வரை லாக்டவுன் மிகப்பெரிய அளவில் பொருளாதார பின்னடைவைக் கொடுத்த பொழுதும், OTT சந்தை களைகட்டியது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், ZEE 5 என நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது சேவையை மக்களுக்குக் கொடுத்தன.இந்திய மக்களுக்கு எப்போதுமே சீரியல் மீதான காதல் குறைவதே இல்லை. அந்த காதலின் நீட்சி தான் வெப் சீரிஸ் மீதான ஈர்ப்பு.

வீட்டில் ரொட்டி ஒலி கேட்க வேண்டும் என்றால், மெட்டி ஒலி சீரியல் முடிந்திருக்க வேண்டும் என்பது ஒரு காலத்தில் தமிழகத்தில் எழுதப்படாத நியதி. அந்த சீரியல்களையே, எபிசோடுகளை சுருக்கி உலகத்தரத்தில் காட்சிப்படுத்த முற்பட்டால் அதுவே வெப்சீரீஸ். பொதுவாக 10 எபிசோட்களை மட்டும் ஏந்தி சீசன்களாக வெளியிடப்படும் வெளிநாட்டு சீரீஸ்களுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு வெப் சீரீஸ்களுக்கும் பலத்த வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

அந்த வகையில் மிர்சாபூர் கவனம் ஈர்க்கிறது. அமேசான் பிரைம் மூலமாக வெளியிடப்பட்ட இந்த வெப் சீரீஸ் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அனுராக் கஷ்யாப்பின் Gangs of Wasseypur படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதி இந்த வெப் சீரீஸில் டானாக நடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். திரிபாதி குடும்பம் எவ்வாறு மூன்றாம் தலைமுறையாக மிர்சாபூரை தனது செல்வாக்கால் ஆள்கிறது என்பதை அதிரடியான திரைக்கதையில் சொல்கிறார்கள், வெப்சீரீஸின் இயக்குனர்கள் கரண் அன்ஸுமான் மற்றும் குர்மீத் சிங்.

ஒரு கல்யாண ஊர்வலத்தில் திரிபாதி குடும்பத்தின் இளைய வாரிசு முன்னா விளையாட்டாகச் சுட்டதில் மணமகன் இறந்துவிட, அதிலிருந்து விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது மிர்சாபூர் கதை.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் மண்டலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துப்பாக்கி கலாச்சாரம், ரவுடிசம், அரசியல், என அத்தனையையும் தத்ரூபமாக புட்டு புட்டு வைக்கிறது மிர்சாபூர்.

மிர்சாபூர் மாவட்டம் Carpets தயாரிப்பிற்குப் பெயர் பெற்ற மாவட்டம், அந்த வியாபாரம் செய்வதாக வெளியே காட்டும் திரிபாதி குடும்பத்தைச் சேர்ந்த அகண்டா ஆனந்த் திரிபாதியின் சட்டத்திற்குப் புறம்பான துப்பாக்கி வியாபாரமும், போதைப் பொருள் வியாபாரமும் தான் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறது. திரிபாதியைக் காலின் பையா என ஊரார் அழைக்கிறார்கள். தனது அமைதியான குணத்தை வைத்து தாதாயிசம் செய்யும் காலின் பையா வழக்கமான அலப்பறை பாலிவுட் டான்களில் இருந்து வித்தியாகப்பட்டுத் தனித்துத் தெரிகிறார்.

இவரிடம் அதே ஊரில் பண்டிட் எனும் வழக்கறிஞரின் மகன்களான பப்ளூ மற்றும் குட்டு எவ்வாறு இணைகிறார்கள், இதில் காலின் பையாவின் மகனுக்கும் பண்டிட் சகோதரர்களுக்கு இடையே உள்ள தகராறு, மிர்சாபூரை அடையத் துடிக்கும் காலின் பையாவுடைய விரோதி ரதிபிரசாத், காலின் பையாவின் மனைவி பீனா மற்றும் அவளுடைய கள்ளக்காதல், இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் சீசனின் கடைசியில் கெத்து காட்டும் திரிபாதி குடும்பத்துப் பெரியவர் சத்யானந்த் என அத்தனை கதாபாத்திரங்களும் ஜனரஞ்சகத்துக்குக் குறைவில்லாமல் செதுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை மிர்சாபூர் நகரத்தோடு இணைத்துக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் குழு இன்னமும் நிறையத் திரைப்படங்களில் ஜொலிக்க வேண்டியவர்கள்.

கதாநாயகிகளான குப்தா சகோதரிகள் கவனம் ஈர்க்கிறார்கள். கோலு குப்தாவாக வரும் ஸ்வேதா திரிபாதி தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயப்பட்ட முகம். இவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் கதாநாயகி. கோலு எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஸ்வேதா தனது நடிப்பால் அசர வைக்கிறார். அவரது இண்ட்ரோ சீன் வேற லெவல்.18 ப்ளஸ் சமாச்சாரங்கள், கொலைகள், துப்பாக்கிச் சூடு என்பது மட்டுமல்லாது சகட்டு மேனிக்கு ஷாட்டுக்கு பத்து கெட்ட வார்த்தைகளும் வருவதால் குடும்பத்தோடு பார்ப்பதைத் தவிர்ப்பது நலம். ஹெட்செட் அணிந்து பார்ப்பது இன்னமும் நலம்.

வடமாநிலங்களில் நிலவும் தாதா கலாச்சாரத்தைப் பார்க்கையில் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்பது போலத் தோன்றும். உத்தரப் பிரதேச மக்களின் வாழ்வியலை அவர்களது ஊரிலேயே காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.காவல் துறைக்கு அடங்காத ரவுடிகள், துப்பாக்கியால் சுடும் கூலிப்படை பெண்கள் , நட்பிற்காக எதையும் செய்யத் துணியும் நண்பர்கள் என மிர்சாபூர் காட்டும் மனிதர்கள் வியக்க வைக்கிறார்கள். அதைக் கேட்பதைவிடப் பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

நெப்போட்டிசம் கோலோச்சும் பாலிவுட் சினிமாவில், மிர்சாபூரில் நடிக்கும் பல திறமையான நடிகர்களை ஊக்குவித்த இயக்குனர்களும், தயாரிப்பு குழுமமும் அடுத்த தலைமுறை இந்திய சினிமாவின் வெளிச்சக் கீற்று.நமக்கு கான்கள் போதும் அனுராக் கஷ்யாப்களையும் நவாசுதீன் சித்திக்களையும் கொண்டாட வேண்டிய தருணமிது. மொத்தத்தில் மிர்சாபூர் புதுப்பேட்டையைக் கொண்டாடியவர்கள் மிஸ் செய்யக் கூடாத ஒரு வெப் சீரீஸ்.

You'r reading வட மாநிலங்களின் தாதா கலாச்சார பிரதிபலிப்பு - மிசார்புர் சீரிஸ் விமர்சனம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை