மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். 1994ல் சுரேஷ் கோபி நடித்த 'காஷ்மீரம்' என்ற படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் 'மாந்த்ரீகம்', 'சூப்பர் மேன்', 'அக்னி சாட்சி'உள்பட ஏராளமான மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் 'சத்தியம்', 'தில்லாலங்கடி', 'காவலன்', 'தெய்வத்திரு மகள்', 'பில்லா 2' உள்பட ஏராளமான படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அஹானா கிருஷ்ணா, 'லூக்கா', 'பதினெட்டாம்படி' உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அஹானா கிருஷ்ணா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கேரள அரசியல் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ஒரு குறிப்பிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் கிருஷ்ண குமார் ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கேரளாவில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அரசியல் குறித்தோ, மதம் குறித்தோ எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்றார். மேலும் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், இந்தியா ஆபத்தான கால கட்டத்தில் இருந்தபோது நாட்டை காப்பாற்ற வந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் கிருஷ்ணகுமாரின் இந்த கருத்துக்கு சமூக இணையதளங்களில் கடும் கண்டனம் எழுந்தன. அவரை கண்டித்து பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்குக் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நடிகர் கிருஷ்ணகுமார் மோடி அரசைக் குறித்து நல்ல கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அவரது குடும்பத்தையும், அவரையும் சிலர் வேட்டையாடுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. கிருஷ்ண குமாரையும், அவரது குடும்பத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்களது கட்சி காக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.