மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜான்பால் ஜார்ஜ். இவர் 'கப்பி', 'அம்பிளி', 'மரியம் டெய்லர்ஸ்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜான்பால் ஜார்ஜ் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 16 நாட்கள் ஆன பிறகும் அவருக்கு எந்த நோய் அறிகுறியும் வரவில்லை. ஆனாலும் தனது மன திருப்திக்காக அவர் கோட்டயத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் பரிசோதனை கூடத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தார்.
மறுநாள் முடிவு கிடைக்கும் என்று அங்கு இருந்தவர்கள் கூறினர். மறுநாள் சுகாதார துறையிடம் இருந்து ஜான்பால் ஜார்ஜுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மருத்துவ அதிகாரி ஒருவர், ஜான்பாலிடம் கொரோனா பாசிட்டிவ் ஆகி இருப்பதாகவும், மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சிறிது நேரத்திலேயே அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஏறி கோட்டயம் அருகே சங்கனாச்சேரியில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மற்ற கொரோனா நோயாளிகளுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் வைத்தும் அவருக்கு நோய்க்கான எந்த அறிகுறியும் ஏற் படவில்லை. 4 நாள் கழித்து ஜார்ஜுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் அவருக்கு நோய் இல்லை என தெரிய வந்தது. இதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா பாதிக்கப்படாமலேயேந4 நாட்கள் கொரோனா நோயாளிகளுடன் இருந்தது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜான் பால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து கேரள முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: உங்களது அரசு கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனது நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் நான் என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன்.
எனக்கு நோய் பரவ வாய்ப்பில்லை என்று தெரிந்தும் நான் தனிமையில் இருந்தேன். இதன் பின்னர் ஒரு திருப்திக்காக தனியார் ஆய்வகத்தில் பரிசோதித்தபோது எனக்கு கொரோனா இருப்பதாக கூறினர். ஆனால் அந்த பரிசோதனை முடிவு தவறானது என்று பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. நான் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸில் சென்ற போது எனது வயதான பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். நான் பட்ட வேதனை சொல்லி மாளாது. இவ்வாறு ஜார்ஜ் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.